×

அமெரிக்காவில் இந்து கோயிலை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: இந்தியா கடும் கண்டனம்

நியூயார்க்: அமெரிக்காவில் இந்து கோயிலில் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுதி அவமதித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் நெவார்க் நகரில் உள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகிகள் நேற்று முன்தினம் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சமூக ஊடகங்களில் வெளியான சில புகைப்படங்களில், கோயிலின் நுழைவாயில் பகுதியில் உள்ள பெயர் பலகையில் ‘காலிஸ்தான்’ என கருப்பு ஸ்ப்ரே மூலம் எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிரா வாசகங்களும் படங்களும் வரையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ‘‘இந்த சம்பவம் இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, காழ்ப்புணர்ச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளது. சமீபத்தில் கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட பிறகு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தேச அவமதிப்பு செயல்களில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருடன் இந்திய அதிகாரி சம்மந்தப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்து கோயில் அவமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவில் இந்து கோயிலை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: இந்தியா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Hindu ,America ,India ,New York ,Modi ,Dinakaran ,
× RELATED அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்...