×

2023ம் ஆண்டில் சைபர் க்ரைம் தொடர்பாக 1,526 வழக்குகள் பதிவு, 147 பேர் கைது:  ₹2.18 கோடி மீட்பு  கமிஷனர் தகவல்

சென்னை, டிச.23: சைபர் க்ரைம் பிரிவின் மூலம் 2023ம் ஆண்டில் 1,526 வழக்குகள் பதிவு ெசய்து, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த வெளிநாட்டு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ₹2.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இணையவழி குற்றங்கள் சமீப காலமாக பெருகி வருகிறது. குறிப்பாக வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகவும், வங்கி கணக்குகள் அப்டேட் செய்ய வேண்டும் என்றும், ஆன்லைனில் பொருட்கள் விற்பதாகவும், அதிக சம்பளத்தில் வேலை தருவதாகவும் கூறி பொதுமக்களிடம், மர்ம நபர்கள் பண மோசடி செய்து வருகின்றனர்.

அதேபோல், தொலைதொடர்பு நிறுவனங்கள் பெயரில் செல்போன்களுக்கு லிங்க் அனுப்பி, அதன் முலம் வாடிக்கையார்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
இதுபோன்ற இணையவழி குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வகையில், இணைய வழி குற்றங்கள் தொடர்பாக, வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களிடையே சைபர் குற்றங்களை கையாளுவது சம்பந்தமாக ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு சார்பில் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, துணை கமிஷனர் கீதாஞ்சலி (சைபர் க்ரைம்), கூடுதல் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், ஆரோக்கியம், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்களை சேர்ந்த 60 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்க உதவியாக இருந்த வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கி பேசியதாவது: சைபர் குற்ற பிரிவில் 2023ம் வருடத்தில் மட்டும் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது 1,526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் சீரிய உதவியுடன் குற்ற செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்கள் இழந்த 2 கோடியே 18 லட்சத்து 59 ஆயிரத்து 943 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இணைய வழி குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் பணியில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றம் செய்த நபர்களிடம் இருந்து பணத்தை மீட்க காவல்துறைக்கு உதவியாக இருந்த வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2023ம் ஆண்டில் சைபர் க்ரைம் தொடர்பாக 1,526 வழக்குகள் பதிவு, 147 பேர் கைது:  ₹2.18 கோடி மீட்பு  கமிஷனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cybercrime Division ,Dinakaran ,
× RELATED பெண் போலீசார் குறித்து சர்ச்சை பேச்சு...