×

நாடாளுமன்ற அத்துமீறல் முக்கிய மூளையாக செயல்பட்டவர் மனோரஞ்சன்? டெல்லி போலீஸ் சந்தேகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறலில் கர்நாடகாவை சேர்ந்த மனோரஞ்சன் முக்கிய மூளையாக செயல்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த 13ம் தேதி மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது உள்ளே குதித் 2 பேர் கலர் புகை குண்டுகளை வீசினர். கலர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு எம்பிக்கள் அலறி அடித்து ஓடினர். அத்துமீறிய மனோரஞ்சன் மற்றும் சாகரை எம்பிக்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மனோரஞ்சன்,சாகர் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட,நீலம், அமோல்,லலித் ஜா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், லலித் ஜாவை டெல்லி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

லலித் ஜாவிடம் நடத்திய விசாரணையில்,வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை மற்றும் மணிப்பூர் வன்முறை தொடர்பில் அவர்கள் அதிருப்தி அடைந்தனர் என்றும் ஆளும் கட்சிக்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டதாக கூறினார். நாடாளுமன்ற அத்துமீறலுக்கான சதி திட்டத்தை அரங்கேற்றுவதற்கான திட்டத்தை வகுத்து கொடுத்தது மனோரஞ்சன் என்று அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். வேலை எதுவும் பார்க்காமல் இருந்த மனோரஞ்சன் கம்போடியா நாட்டுக்கு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, 6 பேரிடமும் நேற்று டாக்டர்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.

The post நாடாளுமன்ற அத்துமீறல் முக்கிய மூளையாக செயல்பட்டவர் மனோரஞ்சன்? டெல்லி போலீஸ் சந்தேகம் appeared first on Dinakaran.

Tags : Manoranjan ,New Delhi ,Karnataka ,Parliament ,Delhi ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி