×

ஆரோக்கியம் காக்கும் ஆயுர்வேதம்… சஞ்சீவனம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதே ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். அந்தவகையில், ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம், பொதுவான உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு திறம்பட சிகிச்சை அளித்து வருகிறது சஞ்சீவனம் ஆயுர்வேதம் மற்றும் யோகா மையம். இது பிரபல மெடிமிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமாகும். இதன் நிறுவனர் ஏ.வி.அனுப். இதுகுறித்து, மேலும் பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை கிளை மையத்தின் தலைமை மருத்துவர் யாழினி.

இன்றைய சூழலில் பலரும் சாதாரணமாக தீர்வு காணக் கூடிய பிரச்னைகளுக்குக்கூட, பல லட்சங்களை செலவழித்து, ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தியும், உட்கொண்டும் உடலின் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத, ரசாயன கலப்பில்லாத நம் முன்னோர்கள் பயன்படுத்திய, மூலிகைகளின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நமது நாட்டில் கொட்டி கிடக்கும் மூலிகைகளின் மகத்துவம் அளப்பரியது. அதனை பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை முறைகளே ஆயுர்வேத மருத்துவ முறைகளாகும். அந்தவகையில், ஆயுர்வேதம் நமது நாட்டின் முதன்மையான மருத்துவ முறையாகும். இந்த மருத்துவமுறைகளை பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்.

கடந்த 2004-இல் இம்மையம் தொடங்கப்பட்டது. இது முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மையமாகும். இங்கு மூன்று பிரிவுகள் உள்ளன. ஒன்று, ஆயுர்வேத பரிவு, மற்றொன்று முடி மற்றும் முகத்துக்கான பிரிவு, மூன்றாவது யோகா மற்றும் நேச்ரோபதி சிகிச்சை பிரிவு. ஆயுர்வேதப் பிரிவில், அனைத்துவகையான பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். உதாரணமாக, சளி, காய்ச்சல் தொடங்கி மூச்சிழுப்பு நோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களான கழுத்துவலி, முதுகு வலி, முதுகுத்தண்டுவட வலி, மூட்டுவலி, முடக்குவாதம், எலும்பு தேய்மானம், கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், உடற்பருமன், சர்க்கரை நோய், தோல் நோய்கள், பெண்களுக்கான மருத்துவம் என அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம்.

இது தவிர ஒருவர் தன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்வதற்கான வழிமுறைகளையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் பயிற்சியளித்து வருகிறோம். முடி மற்றும் முகம் பிரிவில் முடி உதிர்தல் பிரச்னைக்கான சிகிச்சை தொடங்கி, பொடுகு தொல்லை, ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர் போன்றவற்றிற்கு ரசாயன கலப்பில்லாமல் மூலிகைகளை கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம்.

யோகா மற்றும் நெச்ரோபதி பரிவில், முழுக்க முழுக்க யோக பயிற்சிகள் மற்றும் மட் தெரபி போன்ற பலவகையான நேச்ரோபதி தெரபிகள் செய்து வருகிறோம். இந்த நேச்ரோபதி சிகிச்சையின் மூலம் இன்று பல பெண்கள் சந்தித்து வரும், ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்னையை மூலிகை மூலமாகவே, முற்றிலுமாக சரி செய்து வருகிறோம்.

பொதுவாக பெண்கள் பருவம் அடையும் வயதில் தொடர்ந்து மூன்று மாதங்களாவது அவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவுகள் கட்டாயம் கொடுக்க வேண்டும். முந்தைய காலங்களில், பருவம் அடைந்த பெண் குழந்தைகளுக்கு கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், கருப்பட்டி போன்றவற்றை எல்லாம் கொடுத்தார்கள். இவையெல்லாம் எலும்புக்கு வலு சேர்க்கக் கூடியவை, அதனால்தான் அந்த காலத்து பெண்கள் பலரும் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் இப்போது நாம் பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதும் இல்லை. அப்படியே கொடுத்தாலும் குழந்தைகள் அதை சாப்பிடுவதுமில்லை. இதுவே, இன்றைய பெண்கள் பலரும் வளர, வளர நிறைய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதுபோன்ற ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்படவும்
காரணமாகிறது.

அதுபோன்று, அந்த காலத்தில், ஒரு பெண்ணுக்கு பிரசவம் முடிந்த முதல் மூன்று மாத காலம்வரை தண்ணீரில் கை வைக்காமல், பலுவான பொருட்களை தூக்கவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இன்றோ பிரசவம் முடிந்த 1 மாதத்திற்குள்ளாகவே, பல பெண்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவும் ஓய்வும் கிடைக்காமல் போகிறது. குழந்தைக்கு பாலூட்டுவதும் சரிவர செய்ய முடியாமல் போகிறது. இதனால், தாய் – சேய் இருவரின் ஆரோக்கியமும்
பாதிக்கப்படுகிறது.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்றால், குழந்தையை பிரசவித்த பெண்கள் குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு சில சிகிச்சை முறைகள், பயிற்சிகள் முறைகளை முறையாக எடுத்துக் கொண்டால், அவர்கள் 70-80 வயது வரை ஆரோக்கியமாக இருக்க முடியும் என்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது, ஒரு கட்டடத்தை இடித்து மீண்டும் கட்டுவது போன்றதாகும். அதனால், அடிதளத்தில் இருந்து முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் நீண்ட காலம் நலமாக வாழமுடியும்.

அதுபோல, பாலூட்டும் பெண்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் எப்போது பாலூட்டுவதை நிறுத்துகிறார்களோ, அதிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு மாதத்திற்காவது, கால்சியம் அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது எலும்புகள் பலமாக இருக்கும். ஆனால், இன்றைய நிலையில் இவையெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. இதனால்தான் பெண்கள் பலரும் விரைவிலேயே கழுத்துவலி, மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.

அதுபோன்று தற்போது பலரும் சந்திக்கும் மற்றொரு பிரச்னை உடற்பருமன். இதற்கு, லைப் ஸ்டைல்தான் முக்கியகாரணமாகிறது. எங்கள் சிகிச்சை முறையில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதனால் உடற்பருமன் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அவரது உடல்வாகுக்கு ஏற்றவாறு ஃபுட் சார்ட் வழங்குகிறோம். மேலும், உட்வர்தனம் என்ற பொடியின் மூலம் மசாஜும் மேற்கொள்ளுவோம். இதனை தொடர்ந்து 2-3 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும்போது, கட்டாயமாக உடற்பருமனை குறைக்க முடியும்.

பொதுவாக, எங்கள் சிகிச்சை முறைகள் குறைந்தபட்சம் 21 நாட்கள் தொடங்கி நோயின் தீவிரத்தை பொருத்து சில மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதில் பஞ்சகர்மா சிகிச்சை முறைகள் போன்ற பலவிதமான சிகிச்சைமுறைகள் இருக்கிறது. இவையெல்லாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு பின்னர், அவர்களது லைப் ஸ்டைலில் சின்ன சின்ன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால், எந்த நோயும் இல்லாமல் வாழலாம். உதாரணமாக, ஸ்பாண்டிலோஸ் எனும் கழுத்து எலும்பு பிரச்னை, முதுகு தண்டுவட பிரச்னை போன்றவற்றிற்கெல்லாம், ஆயுர்வேத சிகிச்சை முறை நல்ல பலனை தருகின்றது.

பொதுவாக, ஒவ்வொருத்தரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் கட்டாயமாக இருக்கும். அதனை அவ்வப்போது இல்லையென்றாலும், ஆண்டுக்கு ஒருமுறையாவது நிச்சயம் சர்வீஸ் செய்வோம். அப்போதுதான் அது எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடும். அதுபோலத்தான் நமது உடலும். இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற உணவுபழக்கம், காற்றுமாசு, ரசாயண கலப்புகள் என எல்லாமே மாறிவிட்டது.

இதனால், எந்த நோய் எப்போது வரும். எந்த கிருமி எங்கிருந்து தாக்கும் என்று எதுவும் தெரியாது. எனவே, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது நமது உடலை முழுபரிசோதனை செய்து கொண்டு, அதற்கான சிகிச்சைமுறைகளை மேற்கொண்டால், நிச்சயம் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். உதாரணமாக அந்தகாலத்தில், ஆரோக்கியமான உணவை உண்டார்கள், சுத்தமான காற்றை சுவாசித்தார்கள். நல்ல தண்ணீரை அருந்தினார்கள். இருந்தாலும் கூட நம் முன்னோர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ உடலில் சேரும் நச்சு கழிவுகளை அகற்ற விளக்கெண்ணெய் போன்றவற்றை சாப்பிட்டு பேதியாக வெளியேற்றி விடுவார்கள். இதன்மூலம், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வாழ்ந்தார்கள்.

ஆனால், இன்று அனைத்துமே ஆரோக்யமற்ற சூழலில் வாழும் நாம் இதை எல்லாம் செய்ய மறந்துவிட்டோம். எனவே தான் நாளுக்குநாள் புதுபுது நோய்களும் பெருகிக் கொண்டே இருக்கிறது. எனவே ஆண்டுக்கு ஒருமுறையாவது நமக்காக 10 நாட்களை ஒதுக்கி உடலுக்கான பராமரிப்பு கொடுத்தோம் என்றால் நிச்சயம் ஆரோக்கியமாக வாழலாம். இதைத்தான். வண்டி சர்வீஸ் போன்றது என்றேன்.

எப்படி ஒரு வண்டியை சர்வீஸ் செய்து கொண்டு வந்ததும். புதிதுபோன்று இருக்கிறதோ, அப்படி நமது உடலும், கழிவுகளை அகற்றி புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதைத்தான் ஆயுர்வேத மருத்துவமுறைகளும் முதன்மைப்படுத்துகிறது. எனவே, முடிந்தளவு நமது முன்னோர்கள் வழியில், மூலிகை சிகிச்சைகளை அவ்வப்போது எடுத்துக் கொண்டு நலமுடன் வாழ்வோம்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

The post ஆரோக்கியம் காக்கும் ஆயுர்வேதம்… சஞ்சீவனம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Ayurveda ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?