×

சிவகங்கை அருகே நூறு ஆண்டுகள் கடந்தும் சுவை மாறாத ஊருணி குடிநீர்

சிவகங்கை : நூறு ஆண்டுகள் கடந்தும் இன்றும் சுவை மாறாமல் இருக்கும் ஊருணி குடிநீரையே இன்றும் கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிவகங்கை அருகே சோழபுரத்தில் காந்தவன பொய்கை ஊருணி உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 3 ஏக்கர். இந்த ஊருணி நீரை சோழபுரம், நாலுகோட்டை, கருங்காலக்குடி, சின்னபெருமாள்பட்டி, ஈசனூர் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் சோழபுரத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அனைவரின் வீடுகளில் இந்த ஊருணி நீரையே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பில்டர் வாட்டர் மெஷின்கள் அனைத்து பகுதிகளில் வீடுகளுக்கும் சென்று விட்டது. ஆனாலும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இன்றும் குடிநீர் ஊருணி அந்த பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக விளங்கி வருகிறது. ஊருணியின் வடிவமைப்பானது அப்பகுதியின் மழை பொழிவின் அளவு, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த்தேவை இதுபோன்ற விவரங்களை உள்ளடக்கியது. அதை பொறுத்தே அதன் ஆழம், நீள, அகலங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஊருணியின் மையப்பகுதியில் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். மழைபொழிவு குறைவாக இருக்கும்போது ஊருணி வற்றி விட்டாலும் அந்தக் கிணற்றில் இருந்து நீர் கிடைக்கும்.

சில கிராமத்தில் உள்ள ஊருணி நீரில் தேத்தாங்கொட்டை கொண்டு பானையின் உட்புறம் தேய்கப்பட்டு நீர் நிரப்பப்படும். பின்னர் சில மணி நேரங்களுக்குள் பயன்பாட்டுக்கு ஏதுவான தெளிவான நீர் கிடைக்கும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் சோழபுரம், நாலுகோட்டை, கோவானூர், பாகனேரி, நாட்டரசன்கோட்டை மற்றும் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளிலும் இன்றைக்கும் இந்த குடிநீர் ஊருணி மக்களின் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது.

இவர்கள் வெளியே சென்றாலும் இந்த நீரையே வாட்டர் பாட்டில்களில் அடைத்துக் கொண்டு சென்று பயன்படுத்துகின்றனர். முன்னோர்கள் வெட்டி வைத்த ஊருணியை மக்கள் பயன்படுத்தியும் பாதுகாத்தும் வருகின்றனர். சோழபுரம் ராமச்சந்திரன் கூறியதாவது: ‘‘கந்தவனப் பொய்கை ஊருணியானது நூறு ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஊருணி இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே இங்கு சேமிக்கப்படுகிறது.

இதனால் இது வெயில் மழை போன்ற காலங்களில் பயன்படுத்துவதற்கு ஒரே மாதிரியான சுவையும் உடையது. இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. சமைப்பதற்கும் குடிப்பதற்கும் இந்த நீரின் சுவையே வேறு. ஆகையால் தொடர்ந்து இந்த ஊருணி நீரை கிராமத்தினர் பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

கோவானூர் ஜெயா கூறியதாவது: ‘‘எங்களது கிராமத்தில் உள்ள சேங்கை ஊருணியின் நீரை பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். வேற எந்த தண்ணீரை குடித்தாலும் எங்களுக்கு குடிநீர் குடித்த திருப்தி இருக்காது. இந்த ஊருணி நீரை குடிப்பதால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருந்தது கிடையாது.

மேலும் இப்பகுதிக்கு தண்ணீர் வண்டிகள் வருவதில்லை. அப்படியே மீறி ஏதேனும் ஒரு வண்டி வந்தாலும் யாரும் தண்ணீர் வாங்க மாட்டார்கள். பசி நேரந்தில் இந்த ஊருணி நீரை குடித்தால் பசியே அடங்கும். ஊருணிக்குள் கால்நடைகள் வராதவாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் தற்போது இந்த ஊருணி நீரை எங்களது கிராம மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

The post சிவகங்கை அருகே நூறு ஆண்டுகள் கடந்தும் சுவை மாறாத ஊருணி குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Uruni ,Sivaganga ,Sivagangai ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...