×

வேலூர் மாவட்டத்தில் நடந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டத்தில் ₹860.50 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்; டிஆர்ஓ தகவல்

வேலூர், டிச.22: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான பெருந்திரள் கூட்டத்தில் ரூபாய் 860.50 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக டிஆர்ஓ தெரிவித்தார். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நிகழ்வாக, 2024ம் ஆண்டு, ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னோட்டமாக, வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம் டிஆர்ஓ மாலதி தலைமையில் நேற்று நடந்தது.

வேலூர் மாவட்டத்திற்கு ₹819 கோடிக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில், இந்த அரசு செய்துள்ள உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில் முனைவோருக்கு தருகின்ற ஆதரவு, சலுகைகள், மானியங்கள் இவற்றை எல்லாம் பார்த்து, ₹819 கோடி இலக்கை தாண்டி 74 தொழில் நிறுவனங்கள் நமது மாவட்டத்தில் ₹860 கோடியே 50 லட்சம் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் டிஆர்ஓ மாலதி முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் 36 பயனாளிகளுக்கு ₹5,23,23,940 மதிப்பில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிகளை டிஆர்ஓ மாலதி வழங்கினார். இதில் ₹1,60,70,979 மானியமாக வழங்கப்படுகிறது.

தொடர்ந்து டிஆர்ஓ மாலதி பேசியதாவது: சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடத்தப்படவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விழிப்புணர்வினை உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள், என யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பெருந்திரள் கூட்டத்தின் நோக்கம். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் வளர்ச்சியோடு தொழில் வளர்ச்சிக்கும் முதன்மையான பங்கு உண்டு. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, குறிப்பாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி தான் பொருளாதாரத்தை வலிமை கொண்டதாக ஆக்கும். அதிகப்பட்ச திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் தான்.

இத்தகைய எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளர்ச்சிக்காகத் தான் தமிழ்நாடு அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டம் போன்ற திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எம்எஸ்எம்இக்களுக்கு தேவையான நிதி முறைசார்ந்த நிதிநிறுவனக் கடனாகக் கிடைக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் தேவை கருதி, சென்ற ஆண்டு ₹1,168 கோடியாக இருந்த எம்எஸ்எம்இ- ஏசிபி கடன் இலக்கு இந்தாண்டு ₹2255.86 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 30.9.2023 வரையான அரையாண்டில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ₹1206.30 கோடி கடன் வழங்கப்பட்டு திட்டமிட்டவாறு 53 சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது. எனவே, தொழில்முனைவோர் வேலூர் மாவட்டத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

The post வேலூர் மாவட்டத்தில் நடந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டத்தில் ₹860.50 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்; டிஆர்ஓ தகவல் appeared first on Dinakaran.

Tags : MoU ,Vellore district ,Vellore ,World Investors Conference 2024 ,TRO ,Dinakaran ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...