×

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (23ம்தேதி) அதிகாலை நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12ம்தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13ம்தேதி காலை துவங்கியது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி பகல்பத்து 9ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் தெள்ளியீர் பாசுரம், முத்துக்குறி-வியாக்யானம் நாளின் அபிநயத்திற்கேற்ப முத்துக்கொண்டை அலங்காரத்தில், முத்து கபாய், முத்து நேர் கிரீடம், பங்குனி உத்திர பதக்கம், தாயார் பதக்கம், ரங்கூன் அட்டிகை, முத்து அபய ஹஸ்தம், முத்து கர்ண பத்ரம், முத்து திருவடி, 2 வட முத்து மாலை, பின் சேவையில் முத்தங்கி அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார். இன்று (22ம்தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நாளை (23ம் தேதி) நடைபெறுகிறது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியே வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருள்வார். அதனைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரேயுள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். இதைத்தொடர்ந்து 23ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 29ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவை, 30ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜன.1ம் தேதி தீர்த்தவாரி, 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

The post வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi Festival Opening ,Gate of Heaven ,Srirangam Temple ,Srirangam Ranganathar Temple ,Vaikunda ,Ekadasi ,of ,Vaikunda Ekadasi festival Srirangam temple ,of heaven ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...