×

116 ஆண்டு புத்தகம் அபேஸ் பெங்களூரு நூலக திருடர் கைது: இன்ஸ்டா பதிவால் சிக்கினார்

ஊட்டி: ஊட்டியில் உள்ள நூலகத்தில் 116 ஆண்டு பழமை வாய்ந்த புத்தகத்தை திருடிச்சென்ற பெங்களூரு வாலிபர், இன்ஸ்டாவில் பதிவால் போலீசில் சிக்கினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்டேட் வங்கி அருகே மருத்துவமனை சாலையில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின்போது உருவாக்கப்பட்ட நீலகிரி நூலகம் உள்ளது. நூற்றாண்டு கடந்த இந்த நூலகத்தில் ஆங்கிலேயர் காலத்து பழமையான நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த புத்தக கண்காட்சிக்கு பிறகு புத்தகங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

அப்போது 1907ம் ஆண்டு லண்டனில் அச்சிடப்பட்ட ‘பைரேட்ஸ் ஆப் மலபார்’ என்ற பழமையான புத்தகம் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுகுறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நீலகிரி நூலகத்தின் முத்திரையுடன் கூடிய அந்த புத்தகம் விற்பனைக்கு உள்ளது என்று இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் பதிவிட்டிருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரை சேர்ந்த கதித்ரா தேப்நாத் (34) என்பவர் அந்த பதிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூரு சென்ற தனிப்படையினர் அவரிடம் இருந்த புத்தகத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட பெங்களூரை சேர்ந்த நபர், பழமையான புத்தகங்களை திருடி அவற்றை விற்பனை செய்வதை தொழிலாக வைத்துள்ளார். அவர் இருந்த அறையில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள நூலகங்களில் திருடப்பட்ட ஏராளமான புத்தகங்கள் இருந்தன’’ என்றனர்.

The post 116 ஆண்டு புத்தகம் அபேஸ் பெங்களூரு நூலக திருடர் கைது: இன்ஸ்டா பதிவால் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Abbes Bengaluru ,Ooty ,Abes Bengaluru ,Instagram ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...