×

10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக வழக்கு புதுச்சேரி பாஜ முன்னாள் அமைச்சர் விடுதலை செல்லும்: ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு

சென்னை: புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் கல்யாண சுந்தரம் கடந்த 2011ல் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். அப்போது அவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் அவர் தேர்வில் காப்பி அடித்தார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கல்யாணசுந்தரம் சார்பில் வழக்கறிஞர் வி.பாலமுருகன் ஆஜராகி, மனுதாரர் ஆள் மாறாட்டம் செய்யவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. அரசியல் காரணங்களுக்காக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், தமிழக அரசின் இந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. விழுப்புரம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். கல்யாணசுந்தரம் தற்போது பாஜவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக வழக்கு புதுச்சேரி பாஜ முன்னாள் அமைச்சர் விடுதலை செல்லும்: ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BJP ,Jayachandran ,Chennai ,Former ,Transport ,Minister ,Kalyana Sundaram ,Tamil Nadu School Education Department ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...