×

மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாள்; சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்: பல மணிநேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்படுவதால் அவதி

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. சபரிமலையில் கடந்த வருடங்களை விட இந்த வருட மண்டல காலத்தில் பக்தர்கள் வருகை சற்று குறைவாகவே உள்ளது. ஆனாலும் பக்தர்களை பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தி வைப்பதால் தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. தரிசனத்திற்காக வரும் பெரும்பாலான பக்தர்களும் 18ம் படி ஏறித்தான் செல்கின்றனர். தற்போது 18ம் படி ஏறுவதற்கு ஆகும் காலதாமதம் தான் நெரிசல் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

தரிசனத்திற்கு ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த போதிலும் சபரிமலையில் நெரிசல் இன்னும் குறையவில்லை. கடந்த 2 நாளாக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை 16 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை இப்போதும் தொடர்கிறது. சன்னிதானத்தில் நெரிசல் குறையும் வரை பக்தர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி படிப்படியாகத் தான் அனுப்பி வைக்கின்றனர். நேற்று முன்தினம் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றும் காலை முதலே சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 3 மணி முதல் 5 மணி நேரத்திற்குள் 24 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்திருந்தனர். நேற்றும் பம்ைபயில் இருந்த சன்னிதானம் செல்லும் வழியில் பல இடங்களில் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தரிசனம் செய்ய நேற்றும் 10 மணி நேரத்திற்கு மேல் ஆனது. தரிசனத்துக்காக வரும் 25ம் தேதி வரை தினமும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து உள்ளனர். இதுதவிர உடனடி கவுண்டர்கள் மூலமும் முன்பதிவு செய்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்த நாட்களில் நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

The post மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாள்; சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்: பல மணிநேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்படுவதால் அவதி appeared first on Dinakaran.

Tags : Mandala Pooja ,Sabarimala ,Thiruvananthapuram ,Mandala ,Pooja ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...