×

இரட்டை கொலை வழக்கில் கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு: தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் இரு வாலிபர்களை கொலை செய்த வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி தினத்தன்று, தைலாபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் கௌதம், அவரது நண்பர் சந்தோஷ் ஆகிய இருவரும் இரவு 8.30 மணியளவில் அங்குள்ள குளத்தின் அருகே மது அருந்தி, பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சந்தோஷை வெட்டிவிட்டு கௌதமை காரில் கடத்திச் சென்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் ஏரியில் வைத்து கொலை செய்து ஏரி தண்ணீரில் வீசி விட்டுச் சென்றது. இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வினித் (எ) வினித்குமார்(26), விநாயகம் (எ) விநாயக மூர்த்தி (28), காயரம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சக்திவேல் (21), சார்லஸ் (எ) பிரவீன்சன் (20) ஆகிய 5 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கொலையாளிகள் சிலர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்து மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடியாக நேற்று மாலை உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் சட்டத்திற்கான நகலை மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் புழல் சிறையில் ஒப்படைத்தார். இதனையடுத்து கொலையாளிகள் 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

The post இரட்டை கொலை வழக்கில் கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு: தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Madambakkam ,Kuduvancheri ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...