×

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது: கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வெளி மாநிலங்களுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சிபுரத்தை அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து என்பவரின் மகன் சுந்தர் (எ) சுந்தர் ராமன் (37). இவர் தமிழக அரசு வழங்கும் விலையில்லா ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அண்டை மாநிலங்களுக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்தார்.

இது சம்பந்தமாக இவர்மீது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி சுந்தர்ராமன் காஞ்சிபுரத்தை அடுத்த ஆரியபெரும்பாக்கத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய ரேஷன் அரிசியை மறைவிடத்தில் அடுக்கிக் கொண்டிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், அங்கு சென்ற போலீசார் சுந்தர்ராமனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2.15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுந்தர்ராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். தொடர்ந்து சுந்தர்ராமன் ரேஷன் அரிசி கடத்தும் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால், குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரின் பரிந்துரையின் பேரில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், சுந்தர்ராமனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...