×

உடுமலை-மூணார் சாலையில் ஒற்றை யானை உலா: வாகன ஓட்டிகள் அச்சம்


உடுமலை: உடுமலை- மூணார் சாலையில் ஒற்றை யானை வாகனங்களை வழி மறிப்பதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 9/6 செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலம் மூணார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தமிழக- கேரள எல்லையான காந்தலூர், மறையூர், சின்னாறு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் அமராவதி, உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதி சாலையில் அவ்வப்போது யானைகள், மான்கள், காட்டு மாடுகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். மேலும் உணவு, தண்ணீர் தேவைக்காக யானைக் கூட்டம் அடிக்கடி மூணார் சாலையில் உலா வருகின்றன. கடந்த 2 நாட்களாக காமனூத்து பள்ளம், ஏழுமலையான் கோயில் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று உலா வருகிறது.

அவ்வப்போது சாலைகளின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறிக்கும் இந்த யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர். இதையறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மூணார் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அதன் அருகே சென்று செல்பி எடுப்பதோ, அதனை ஆத்திரமூட்டும் வகையில் செல்போனில் படம் பிடிப்பதோ, வாகனத்தின் ஹாரன்களை அடிக்கவோ கூடாது. யானை சாலையை விட்டு இறங்கி வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருக்க வேண்டும். ஒற்றை யானை மிகவும் ஆபத்தானது. எனவே பொது மக்கள், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

The post உடுமலை-மூணார் சாலையில் ஒற்றை யானை உலா: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Udumalai-Moonar road ,Udumalai ,Udumalai-Munar road ,Tirupur district… ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு