×

புதிய தொழில்நுட்பத்தில் நெடுஞ்சாலை கட்டண வசூல்: விரைவில் அறிமுகம் : நிதின் கட்கரி தகவல்


புதுடெல்லி: புதிய தொழில்நுட்பத்தில் நெடுஞ்சாலை கட்டண வசூல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் நவீன கேமராக்களை (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா) அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த 2018-19ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களாக இருந்தது. பின்னர் 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைக்கப்பட்டது. இருப்பினும் ‘பீக் ஹவர்ஸ்’ சமயங்களில் சுங்கச்சாவடிகளில் இன்னும் சில தாமதங்கள் உள்ளன. நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவை குறைக்க வேண்டும்.

The post புதிய தொழில்நுட்பத்தில் நெடுஞ்சாலை கட்டண வசூல்: விரைவில் அறிமுகம் : நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Nitin Khatkari ,New Delhi ,EU ,Nitin Katkari ,Dinakaran ,
× RELATED ஒரு வாகனம், ஒரு பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது