×

நீட், யுபிஎஸ்சி மோசடிகள் வெளியான பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஒன்றிய பட்ஜெட் நாளை தாக்கல்

புதுடெல்லி: நீட், யுபிஎஸ்சி மோசடிகள் வெளியான பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், நீட் தேர்வு முறைகேடு பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். ஒன்றியத்தில் 3வது முறையாக பாஜ கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரைக்குமான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நடப்பாண்டின் எஞ்சிய காலத்திற்கான முழு பட்ஜெட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்காக, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

அதைத் தொடர்ந்து, முழு பட்ஜெட்டை மக்களவையில் நாளை அவர் தாக்கல் செய்வார். இதில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் இடம் பெறும் என ஒன்றிய அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருவதால் அனைத்து தரப்பினரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். மேலும், 19 அமர்வுகளாக நடக்க உள்ள இக்கூட்டத் தொடரில், 90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்தை மாற்றுவது உட்பட 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் பெறப்படும்.

இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அவையை சுமூகமாக நடத்த ஆதரவு கோரும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் ஒன்றிய அரசு தரப்பில் நேற்று நடந்தது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 44 கட்சிகளைச் சேர்ந்த 55 தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த கூட்டத்தொடரின் போது, ஜனாதிபதி தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்து பேசுகையில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதை குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் இதுபோன்ற சம்பவங்கள் அவையில் நடக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

அதே சமயம், நீட் வினாத்தாள் கசிவு, மக்களவை துணை சபாநாயகர் பதவி உள்ளிட்ட விவகாரங்களை அவையில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. மக்களவை மரபுப்படி துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற காங்கிரசுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்கான உத்தரவாதத்தை இதுவரையிலும் ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது. எனவே இந்த விவகாரம் கூட்டத்தொடரில் கட்டாயம் எழுப்பப்படும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, ஆந்திராவுக்கும், பீகாருக்கும் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று அவ்விரு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து ஆளும் தெலுங்கு தேசம் கட்சி நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட வேண்டுமெனவும், ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதே பிரச்னைக்கு ஒரே தீர்வு என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி விஜய்சாய் ரெட்டி வலியுறுத்தினார்.

இதே போல, ஒடிசாவிற்கும் மாநில சிறப்பு அந்தஸ்து கேட்கப்படும் என பிஜூ ஜனதா தளமும் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டு பொறுப்பு. விதிகளை பின்பற்றி எந்தவொரு பிரச்னையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.

இந்த கூட்டத் தொடரில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த எம்பி கே.சுரேஷ், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தொடர் ரயில் விபத்துகள், நீட் மற்றும் யுபிஎஸ்சி தேர்வு முறைகேடு, மணிப்பூர் கலவரம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஒன்றாக குரல் கொடுப்போம் எனவும் கூறி உள்ளார். இதனால் இரு அவைகளிலும் கடும் அமளிகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

* கன்வார் விவகாரத்தை எழுப்பிய சமாஜ்வாடி
உபி, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஷ்ரவண மாதத்தில் இந்துக்கள் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த யாத்திரை மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்ப்பது வழக்கம். இதன் காரணமாக, உபியில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் அவற்றின் உரிமையாளர் பெயர், பணியாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டுமென அம்மாநில பாஜ அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென சமாஜ்வாடி எம்பி ராம்கோபால் யாதவ் அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார்.

* மவுனம் காத்த தெலுங்கு தேசம்
மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பேசுபொருளானது. தேர்தலில், பாஜவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், ஆந்திராவில் ஆட்சி அமைத்துள்ள தெலுங்கு தேசத்தின் ஆதரவுடன் ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென அனைத்து கட்சி கூட்டத்தில் ஒன்றிய அரசிடம் கேட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் தரப்பில் எந்த கோரிக்கையும் விடுக்கப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

நிர்மலா சீதாராமனின் 7வது பட்ஜெட்

* பிரதமர் மோடி தலைமையிலான பாஜவின் 2வது ஆட்சிக் காலத்தில் 2019ம் ஆண்டு நாட்டின் முதல் முழுநேர ஒன்றிய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். நாளை அவர் தொடர்ச்சியாக தனது 7வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் ஒன்று மட்டும் (கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது) இடைக்கால பட்ஜெட்.

* இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்க உள்ளார். மொரார்ஜி தேசாய் 1959 முதல் 1964 வரை தொடர்ச்சியாக 5 முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதை முறியடித்து நிர்மலா சீதாராமன் புதிய வரலாறு படைக்க உள்ளார்.

* தற்போது வரை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

* முன்னாள் நிதி அமைச்சரான காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் 9 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 8 பட்ஜெட்களை தாக்கல் செய்து 3வது இடத்தில் உள்ளார்.

The post நீட், யுபிஎஸ்சி மோசடிகள் வெளியான பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஒன்றிய பட்ஜெட் நாளை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : NEET ,UPSC ,EU ,NEW DELHI ,Finance Minister ,Nirmala Sitharaman ,Parliament ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுத் துறை உயர் அதிகாரிகள்...