×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘பேர்ட் ஆப் பாரடைஸ்’ மலர்


ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், ‘பேர்ட் ஆப் பாரடைஸ்’ மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பூங்காவில் பல ஆயிரம் தொட்டிகளில் பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகள் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் முதல் சீசனுக்காக தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது விதைப்பு பணிகள் முடிந்த நிலையில், நாற்று உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் முதல் சீசனுக்கான நடவு பணிகள் துவக்கப்பட உள்ளது. இதற்காக, பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் மலர் தொட்டிகள் அனைத்தும் தயார் செய்யும் பணிகள் நடக்கின்றன. இதனால், தற்போது பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது ‘பேர்ட் ஆப் பாரடைஸ்’ எனப்படும் மலர்கள் பூத்துள்ளன. பறவைகள் போல் காட்சி அளிக்கும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பேர்ட் ஆப் பாரடைஸ்’ வகை செடி தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டது. ஆண்டுதோறும் டிசம்பரில் பூக்கும். ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என 3 வண்ணங்களில் பூக்கும். ஊட்டியில் தற்போது தாவரவியல் பூங்கா, தமிழகம் மாளிகை பூங்காக்களில் ஆரஞ்சு வண்ணத்தில் இந்த மலர்கள் பூத்து காணப்படுகிறது. ஒரு செடியில் ஒன்று முதல் 5க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். அவை பார்ப்பதற்கு பறவை பறப்பதுபோல் தோற்றமளிப்பதால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர் என்றனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘பேர்ட் ஆப் பாரடைஸ்’ மலர் appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Bird of Paradise ,
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்