×

மங்களம் தருவாள் சர்வமங்களா!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வல்லமை தந்திடுவாள் பராசக்தி
வாழி என்றே துதிப்போம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!

எத்தனை கோயில்களில் மீனாக்ஷி சன்னதி இருந்தாலும், மதுரைதான் மீனாக்ஷியின் மூலஸ்தானம். எத்தனை கோயில்களில் காமாக்ஷி சன்னதி இருந்தாலும், காஞ்சிதான் காமாக்ஷியின் மூலஸ்தானம். அதேபோல் எத்தனை கோயில்களில் ராஜராஜேஸ்வரி சன்னதி இருந்தாலும், நங்கநல்லூர் ஸர்வமங்களா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில்தான் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் மூலஸ்தானம். இந்தக் கோயில் சக்தி வாய்ந்த பற்பல யந்திரங்கள் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஸ்ரீவித்யா மந்த்ராலயமாகும்.

சென்னை நங்கநல்லூரில் முதன் முதலில் ஏற்பட்ட கோயில் இதுவே. இது அம்பாள் அருள் பெற்ற மஹான் பூஜ்யஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகள் ஸ்தாபித்த ஆலயமாகும் ‘‘இந்த சக்திபீடம் மந்த்ர சாஸ்திர அடிப்படையில், அதுவும் சாக்த தந்த்ர முறைப்படி கட்டப் பட்டுள்ள மந்திர வடிவம்’ என்பது ஆலய ஸ்தாபகர் ஸ்ரீராஜகோபால சுவாமிகளின் வாக்கு”. இந்தக் கோயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை நாம் பார்ப்போம்.

ஆலயத்தின் சிறப்பம்சங்கள்

இங்கே அம்பாளைத் தரிசனம் செய்தால் 51 சக்தி பீடங்களையும் தரிசித்த பலன் நிச்சயமாய்க் கிடைக்கும். இக்கோயிலில் சக்தி வழிபாட்டு முறைப்படி, ஸ்ரீவித்யா சாஸ்த்ரத்தை அனுசரித்தே எல்லா பூஜைகளும் நடைபெறுகின்றன. இரண்டு பக்கமும் ஒவ்வொரு படியிலும் நித்யாதேவிகள் அமர்ந்திருக்க, பதினாறு படி மீது ஸ்ரீசக்ர மஹாமேரு மேல் வீற்றிருக்கிறாள் அம்பாள். சக்தி வாய்ந்த யந்த்ரங்கள் பல ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீவித்யா மந்த்ராலயம் இது.

கோயிலுக்குள் வருண பகவான் தவமியற்றிய இடம் உள்ளது. அவர் தவத்துக்கு மெச்சி தீர்த்தத்தில் தன்வந்தரி பகவான் எழுந்தருளினார். தன்வந்தரி பகவான் எழுந்தருளியுள்ள இந்த தீர்த்தம் நோய் தீர்க்கும் தீர்த்தம் ஆகும்.அம்பாளைத் தரிசனம் செய்யப்போகும் படிக்கட்டுகளில் திதி தேவிகள் யந்திரத்துடன் விளங்குகிறார்கள். இப்படி இருப்பது உலகிலேயே இத்திருக்கோயிலில் மட்டுமே. ஒவ்வொரு திதி தேவிக்கும் அகஸ்திய முனிவர் அருளிய ஷோடச மாலை பாடல் அழகிய தமிழ் வரிகளால் யந்திரத்தின் அருகில் பதிக்கப்பட்டுள்ளது.

திதி தேவிகளை வணங்கி அம்மனுக்குப் பூஜை செய்வதன் மூலம் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கும். அம்பாள் சன்னதியில் ஸ்வயம்பு உற்சவ மூர்த்தியும் மஹாமேருவும் காணலாம்.அம்பாளுக்கு இரு பக்கங்களிலும் வாராஹி அம்மனுக்கும் சியாமளாதேவிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. தவிர, மஹாகணபதி, மஹாகாளி, பைரவர், தத்தாத்ரேயர், துர்கை, தன்வந்தரி சன்னதிகளும் உள்ளன.யாகசாலையில் மஹாமேரு, திக்பாலகர்கள், சேஷாத்ரி ஸ்வாமிகள் பூஜை செய்த சிவலிங்கம், சுரைக்காய் ஸ்வாமிகளின் யோக தண்டம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

திருமூலர் பாட்டில் அம்மன்
அன்னை வடிவமடா!
இவள் ஆதி பராசக்தி தேவியடா!
இவள் இன்னருள் வேண்டுமடா!
பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!

திருமூலர் இக்கோயிலில் குடிகொண்டுள்ள ராஜராஜேஸ்வரி அம்மனைத் தன் திருமந்திரத்தில் சக்தி பேதம் திரிபுரை சக்கர விளக்கத்தில் ‘ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இங்கே ‘நங்கை’ என்று குறிப்பிட்டிருப்பது என்றும் 16 வயதில் விளங்கும் “ஷோடசி” ஆகிய அம்பாள் ராஜராஜேஸ்வரியே.ஒரு மஹாராணி ஓரிடத்துக்கு எழுந்தருளும் போது, கூடவே அத்தனை பரிவாரங்களும் வருவார்கள்.

அது போன்று, இந்த ஊரில் முதன் முதலில் மூவுலகின் மஹாராணியான ராஜராஜேஸ்வரி அம்மன் எழுந்தருளினாள். கூடவே அத்தனை தெய்வங்களும் பரிவார தேவதைகளும் இங்கே தமக்குக் கோயில்கள் அமைத்துக் கொண்டு குடிவந்து விட்டனர். இன்று நங்கநல்லூர் இதனால் “கோயில் நகரம்” என்று புகழ் பெற்று விளங்குகிறது. ஸ்ரீசிருங்கேரி ஆச்சார்யாள் அபிநவ வித்யாதீர்த்தர் மற்றும் காஞ்சி ஜகத்குரு  ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இக்கோயிலுக்கு விஜயம் செய்து ஆசி வழங்கியுள்ளார்.

மஹாபெரியவர் பல பக்தர்களை இக்கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசனம் பண்ணச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.காஞ்சி காமாக்ஷி ஸுப்ரபாதம் இயற்றிய ஸரஸகவி லக்ஷ்மிகாந்த சர்மா, மஹாபெரியவர் உத்தரவின் பேரில் இக்கோயில் அம்பாள் மேல் ஸுப்ரபாதம் மற்றும் ப்ரபத்தி இயற்றி இருக்கிறார். பாபநாசம் சிவன் இக்கோயில் அம்பாள் மேல் இரண்டு கீர்த்தனைகள் பாடி இருக்கிறார். ஆண்டவன் பிச்சியம்மாள் அம்பாள் மீது நவசக்ர கீர்த்தனைகள், பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் பற்பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.

யாகத்தீயில் பிறந்த ஸ்வயம்பு மூர்த்தி
சக்திசக்தி என்றால் வெற்றி
தானே நேரும் கண்டீரே
சக்திசக்தி என்றால் இன்பம்
தானே சேரும் கண்டீரே

அம்பாள் சன்னதியில் ஒரு சிறு உற்சவமூர்த்தியைக் காணலாம். இந்த மூர்த்தி மிகவும் பெருமை வாய்ந்தது. இதற்குக் காரணம் இது ஒரு ஸ்வயம்பு மூர்த்தி. தானாகவே உண்டானது.
கிட்டத்தட்ட 60 வருஷங்களுக்கு முன்பு நவராத்ரி சமயம், இக்கோயிலைக் கட்டிய மஹான் ஸ்ரீராஜகோபால ஸ்வாமிகள் அம்பாளுக்கு ஹோமம் பண்ணிக் கொண்டிருந்தார். ஹோமத்தின் முடிவில், ஹோம அக்னிக்கு மேற்பக்கம் பளபளவென்று சிறு கற்கள் போன்ற பொருட்கள் மிதந்தன.

இது கண்டு வியந்து ஸ்வாமிகளும் இதை நேரில் கண்ட பக்தர்களும் அக்கற்களை மஹாபெரியவரிடம் கொண்டு போய்க் காண்பித்தனர். அவர் மிகவும் மகிழ்ந்து ‘இவை ஸித்த மணிகள். அம்பாள் மிகவும் த்ருப்தி அடைந்திருந்தால் ஹோமத்தின் முடிவில் இம்மணிகள் வெளிப்படும். இவற்றை பத்திரமாய் வைத்திருங்கள்” என்று சொல்லி ஆசி வழங்கினார். இம்மணிகள் நாளடைவில் ஒன்று சேர்ந்து அம்மன் ரூபம் கொண்டது. இந்த அதிசய மூர்த்தியை இப்போது மூலஸ் தானத்தில் அம்பாள் பக்கத்தில் காணலாம். மானிடக் கைகளால் உண்டு பண்ணப் படாத இந்த அதிசய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தது. வரப்ரசாதி.

“க்ஷிப்ரப்ரஸாதினி” – விரைந்து வரம் தருபவள்
துன்பமே இயற்கையெனும் சொல்லை
மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்

அம்பாளுக்கு ‘க்ஷிப்ரப்ரஸாதினி’ என்று பெயர். பக்தர்களுக்கு விரைவில் வரம் தருபவள். பையனுக்கோ பெண்ணுக்கோ திருமணம் ஆக வேண்டும் என்று இங்கு அம்மனிடம் வேண்டிக் கொண்டவர், சில மாதங்களிலேயே புதுமணத்தம்பதிகளுடன் அம்மனிடம் ஆசி வாங்க வருவதை இக்கோயிலில் அடிக்கடி காணலாம். அதே போல் குழந்தைச் செல்வம் வேண்டியவர் கைக்குழந்தையுடன் வருவதையும், நோய் தீர வேண்டியவர் நோய் தீர்ந்து ஆரோக்யத்துடன் தரிசனம் பண்ண வருவதையும், வெவ்வேறு கஷ்டங்கள் தீர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் அம்மனைத் தரிசிக்க வருவதையும் பெரும்பாலான நாட்களில் இங்கு காணலாம்.

இக்கோயிலைக் கட்டிய மஹான் ஸ்ரீராஜகோபால ஸ்வாமிகள் தனது 7வது வயதிலேயே ஸ்ரீதத்தாத்ரேயரிடமிருந்து நேரடியாக தீக்ஷை பெற்றவர். சாக்த வழிபாடான ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயத்துக்கு ஸ்ரீதத்தாத்ரேயர்தான் மூலகுரு, ஸ்ரீஸ்வாமிகள் அம்பாளை த்யானம் பண்ணிக் கடும் தபஸ் பண்ணி அம்பாளை நேரே தரிசனம் பண்ணி, அம்பாள் உத்தரவின் பேரில் இத்திருக்கோயிலைக் கட்டினார்.

மஹாமேரு வடிவில் அமைந்த சன்னதி எங்கும் இல்லாதபடி, முழுக்க முழுக்க ஸ்ரீவித்யா முறைப்படி, அம்பாள் உத்தரவுப்படி கட்டப்பட்ட கோயில் இது. ஸ்ரீசக்ரத்தின் வடிவான மஹாமேருவின் மேலே, பிந்து ஸ்தானத்தில் அம்பாள் வீற்றிருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. இக்கோயிலில் மஹாமேருவில் உள்ளபடியே ஒவ்வொரு ஆவரணத்தையும் ஒன்றின் மேல் ஒன்றாகத் தூக்கி, மலைபோல் பிரதிஷ்டை செய்து, ஒன்பதாவது ஆவரணத்தில் பிந்து ஸ்தானத்தில் அம்பாளை அமரச்செய்துள்ளது. அம்பாளுக்குக் கீழே படிப்படியாக மற்ற ஆவரண தேவதைகள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாள் கொலுவிருக்கும் அரண்மனையில் அம்பாளைச் சுற்றி சந்த்ர கலைகளுக்கு ஏற்ப, மஹா பராக்ரமம் பொருந்திய 15 திதி நித்யாதேவிகள் கொலுவிருப்பதாகப் புராணங்களும்
சாஸ்திரங்களும் சொல்கின்றன. அம்பாள் ராஜராஜேஸ்வரியை முழு நிலவுக்கு ஒப்பிடலாம். நிலவின் கலைகளான ப்ரதமை முதல் பஞ்சதசி வரை நாம் காணும் 15 கலைகளுக்கு நிகராக திதி நித்யா தேவியர் 15 பேர் அமர்ந்திருக்க, அவர்களுக்கு மேலே, மேருவின் உச்சியில் அம்பாள் மஹாராணியாக வீற்றிருக்கும் திருக்காட்சியை இத்திருக்கோயிலில் காணலாம்.

இக்கோயில் ஸ்ரீவித்யா முறைப்படி மந்த்ர பூர்வமாகக் கட்டப்பட்டுள்ளதால், இங்கு குருக்கள் பூஜை செய்ய முடியாது. முறைப்படி ஸ்ரீவித்யா மந்திர தீட்சை பெற்றவர்கள் மட்டுமே அம்பாளுக்கு இங்கு பூஜை செய்ய முடியும். இக்கோயிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் அம்பாளை வேண்டி குங்குமம் போடுவது. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு திதி உண்டு. காலண்டரில் அன்றைய திதி போட்டிருக்கும். மேலும், அவைகள் வளர்பிறையிலும் வரும், தேய் பிறையிலும் வரும்.

மேற்சொன்ன திதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்திவாய்ந்த திதி தேவி உண்டு. இவர்கள் ‘திதிநித்யா தேவி’ என்று வழங்கப்பெறுவர். கோயிலில் அம்பாளைத் தரிசனம் செய்யப் படி ஏறும் முன், அன்றைய திதிநித்யா தேவியை எண்ணி வணங்கி, மனதில் உள்ள ப்ரார்த்தனைகளைச் சொல்லி முதல் படியில் வைத்துள்ள பெட்டியில் குங்குமப் பொட்டலத்தைப் போட்டுவிட்டு தரிசனத்துக்கு மேலே போக வேண்டும். அன்றைய திதிநித்யா தேவியின் பெயரைக் கோயிலில் எழுதி வைத்திருப்பார்கள்.

இதனால் அந்த திதிநித்யா தேவியின் அருள் கிடைத்து, அனைத்து தோஷங்களும் நீங்கி, மேலே அம்பாளைத் தரிசனம் பண்ணப் போகமுடிகிறது. இப்படிச் செய்து மேலே ஏறி அம்பாளைத் தரிசனம் பண்ணின மாத்திரத்திலேயே அநுக்ரஹம் கிடைத்து விடுகிறது. ஸர்வமங்களமும் தருபவள் அம்பாள். ‘ஸர்வமங்களா’ என்றே புகழ்பெற்ற அம்மன் ஸ்ரீராஜராஜேஸ்வரியை சென்னை நங்கநல்லூருக்கு வந்து தரிசனம் செய்து, வரும் புத்தாண்டில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் சுபிக்ஷமும், மகிழ்ச்சியும், நிறைவும், மன நிம்மதியும் பெறுங்கள்.

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்

தொகுப்பு: குடந்தை நடேசன்

The post மங்களம் தருவாள் சர்வமங்களா! appeared first on Dinakaran.

Tags : Sarvamangala ,Parashakti ,Om Shakti ,Om Parashakti ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...