×

சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை!: அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் பொன்முடி.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 2016ல், வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீடு செய்தனர். வருமான வரி கணக்கு, சொத்து விவரங்களுடன், 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணைகளை முன்வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. பொன்முடியின் மனைவிக்கு சொந்தமான 110 ஏக்கர் விவசாய நிலத்தில் வரும் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக காட்டுவதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வருமான வரிக்கணக்கு அடிப்படையில், அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது தவறு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தனது வருமானத்திற்கு அதிகாக, சுமார் 64 சதவீத சொத்துக்களை அமைச்சர் பொன்முடி சேர்த்து வைத்திருந்தது தவறு. லஞ்ச ஒழிப்புத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல் பொன்முடியும், அவரது மனைவியும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இருவரையும் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

வழக்கமாக பயன்படுத்தும் தேசியக்கொடி உள்ள வாகனத்திற்கு பதில், வேறு வாகனத்தில் அமைச்சர் பொன்முடி வந்திருந்தார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொன்முடியின் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைப்பு:

பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொன்முடி, அவரது மனைவியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் பொன்முடி தற்போதைக்கு சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.

அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி?

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை பொன்முடி இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு:

சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பொன்முடி தரப்பு முடிவு செய்துள்ளது.

The post சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை!: அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை இழந்தார் பொன்முடி.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. L. A. ,ICOURT ACTION VERDICT ,Chennai ,Supreme Court ,Ponnood ,
× RELATED திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்...