×

ஆந்திராவில் செம்மரம் திருடிய வழக்கில் கைது சிந்தாதிரிப்பேட்டை ஏட்டு சஸ்பெண்ட்: கமிஷனர் ரத்தோர் அதிரடி

சென்னை, டிச.21: ஆந்திராவில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரங்களை கடத்திய வழக்கில், கைதான சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஏட்டு சந்திரசேகரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக சந்திரசேகர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி பணி முடிந்து, அன்று இரவே நண்பர்கள் 15 பேருடன் ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடோன் ஒன்றில் இருந்த செம்மரங்களை கடத்திக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில சத்தியவேடு போலீசார், தலைமை காவலர் சந்திரசேகர் செம்மரம் கடத்திய வாகனத்தை பின்தொடர்ந்து வந்து சித்தூர் சுங்கச்சாவடி அருகே மடக்கி பிடித்தனர். செம்மரம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சத்தியவேடு போலீசார் வழக்கு பதிந்து தலைமை காவலர் சந்திரசேகர் உள்பட செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். இதுகுறித்து ஆந்திர மாநில காவல்துறையினர் சென்னை மாநகர காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தலைமை காவலர் கைது தொடர்பான தகவல்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதைதொடர்ந்து தலைமை காவலர் சந்திரசேகரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

The post ஆந்திராவில் செம்மரம் திருடிய வழக்கில் கைது சிந்தாதிரிப்பேட்டை ஏட்டு சஸ்பெண்ட்: கமிஷனர் ரத்தோர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sindathiripet ,Commissioner ,Rathore ,Chennai, ,Andhra Pradesh ,Chintadirippet ,
× RELATED தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054...