×

தண்டராம்பட்டு அருகே காரில் வந்து செல்போன் டவர் பேட்டரி திருடிய 2 பேர் கைது: மேலும் 2 பேருக்கு போலீஸ் வலை

தண்டராம்பட்டு, டிச.21: தண்டராம்பட்டு அருகே காரில் வந்து செல்போன் டவர் பேட்டரிகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செல்போன் டவரில் பராமரிப்பாளர் தங்கராஜ் என்பவர் கடந்த 12ம் தேதி பேட்டரியை மாற்றிவிட்டு சென்றுள்ளார். பின்னர், கடந்த 15ம் தேதி வந்து பார்த்தபோது சில பேட்டரிகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கராஜ் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை எஸ்ஐ மணிசரவணன் தலைமையிலான போலீசார் சாத்தனூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை செய்தனர். அப்போது, டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது 6 பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கொழுந்தம்பட்டு கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் இருந்து திருடிய பேட்டரிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜ்(31), சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வம்(50) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து பேட்டரிகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டில் தொடர்புடைய மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தண்டராம்பட்டு அருகே காரில் வந்து செல்போன் டவர் பேட்டரி திருடிய 2 பேர் கைது: மேலும் 2 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Dandarampattu ,Dinakaran ,
× RELATED சுடுகாட்டிற்கு பாதை ஏற்படுத்தி தந்த...