×

வெள்ளம் வடியாததால் தத்தளிக்கும் தூத்துக்குடிஒன்றிய குழு படகில் சென்று ஆய்வு: இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் சேதங்களை பார்வையிடுகின்றனர்; தீவுகளாக மாறிய ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல்; மீட்பு பணிகளில் அரசு தீவிரம்

நெல்லை: அடைமழை பெய்து நான்கு நாட்களாகியும் வெள்ளம் வடியாமல் தூத்துக்குடி தத்தளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல் போன்ற பல பகுதிகள் தீவுகளாக காட்சியளிக்கிறது. இங்குள்ள சேதங்களை 3 நாட்கள் ஆய்வு செய்ய ஒன்றிய குழு நேற்று தூத்துக்குடி வந்தது. தூத்துக்குடியில் நேற்று படகில் சென்று ஆய்வு செய்தது. இன்றும், நாளையும் பல்வேறு இடங்களுக்கு சென்று சேதங்களை பார்வையிடுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வந்ததால் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. குறிப்பாக தாமிரபரணி கரை ஓரம் உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல இடங்கள் தண்ணீரில் மிதந்ததால் தனித்தீவாக காட்சியளித்தது. சாலைகள், வீடுகள், விவசாய நிலங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். தாமிரபரணி ஆற்றில் கலந்த வெள்ளநீர் மருதூர் அணைக்கட்டு வழியாக ஸ்ரீவைகுண்டம், ஏரல் வழியாக புன்னக்காயல் முகத்துவாரத்திற்கு சென்று வங்கக் கடலை சென்றடைந்தது.

நெல்லையில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் பாய்ந்து ஓடிய நிலையில், மருதூர் அணைக்கட்டை தண்ணீர் கடந்த போது 1.50 லட்சம் கனஅடியை எட்டியது. வைகுண்டம், ஏரலுக்கு தண்ணீர் சென்ற போது தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் உள்ளிட்ட 1000த்திற்கும் மேற்பட்ட ஊர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கிராமங்களுக்குள் செல்ல வழியில்லை. இதனால் மீட்பு படைகள் அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழைநீர் வடிந்தால்தான் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? உயிர் இழப்புகள் எவ்வளவு என்பது எல்லாம் தெரியவரும். வெள்ளம் வடியாத இடங்களுக்கு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் சென்று உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை – திருச்செந்தூர், திருச்செந்தூர் – தூத்துக்குடி செல்லும் சாலைகள் ஆங்காங்கே பெரிய பள்ளத்தாக்கு போல் பிளவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையும் கடும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு பின்னர் தற்காலிக சாலைகள் அமைத்து நெல்லை – தூத்துக்குடி போக்குவரத்து நேற்று முதல் சீரானது. கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுகளாக மாறியுள்ளன. தூத்துக்குடி மாநகரிலும் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் மழை நீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். சில இடங்களில் படகுகள் மூலம் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சில பகுதிகளில் படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எட்டயபுரம் அருகே மாசார்பட்டி, அயன்ராசாபட்டி, நென்மேனி, இருக்கன்குடி உள்ளிட்ட 20 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஓட்டப் பிடாரத்திலிருந்து வடக்கே செல்லும் பசுவந்தனை, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுப்புற குக்கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதியம்புத்தூர் – தூத்துக்குடி சாலையிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஓட்டப்பிடாரம் – குறுக்குச்சாலையிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. வெள்ளநீர் வடியாததால் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி விபத்துகளை தவிர்க்க மின் சப்ளை துண்டிக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரில் மின் சப்ளை சீரடைந்த நிலையில், தூத்துக்குடியிலும் வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் நேற்று மின்சார விநியோகம் சீரானது. செல்போன் சேவைகளும் முற்றிலும் செயலிழந்துள்ளன.

இதேபோல், தூத்துக்குடியில் உள்ள அனைத்து உப்பளங்களும் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி முடங்கி உள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடிமாவட்டங்களில் தீவுகளாக மாறி உள்ள கிராமங்களில் வெள்ள நீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி, ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறையினர் என அனைத்து துறையினர் ஒருங்கிணைத்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கேபி சிங், நீர்வளத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் தங்கமணி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விஜயகுமார், ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை துறையின் இயக்குநர் பொன்னுச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய ஒன்றியக் குழுவினரிடம் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்கள், சாலைகள், பாலங்கள், பாதிப்புக்குள்ளான இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், கால்நடைகள், நீர்நிலைகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக ஒன்றியக் குழுவினருக்கு விளக்கப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி, முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் படகு மூலம் வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட்டனர். இன்றும், நாளையும் ஒன்றிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். ஆய்வின்படி பல்வேறு சேதங்கள் கணக்கிட்டு விவசாய நிலங்கள், மீனவ படகுகள் சேதம், உயிர்பலி அனைத்தையும் கணக்கிட்டு அதன் அறிக்கை தயார் செய்யப்படும். இது சம்பந்தமான ஆய்வு நாளை திருநெல்வேலியில் நடைபெறும் என்றார். தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த ஆய்வு நடைபெறுவதாக தெரிவித்தார். குறைந்தபட்சம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு 5ஆயிரம் கோடி சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை 9 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் முழு சேதாரம், உயிர்பலி குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

முழு விபரங்கள் மாலைக்குள் தெரியவரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ராணுவம், என்.டி.ஆர். எல்.எப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை உள்ளது. அப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் ஒரு நாளைக்கு தேவைக்கு தகுந்தாற்போல் உணவு, குடிநீர் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகிறது.தற்போது பத்து ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை மீட்கப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பில் ஈடுபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்மி 3 கம்பெனி படையினர் வந்துள்ளனர். இன்னும் ஆறு மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகள் கணக்கிடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீரால் தனித்தீவாக மாறி உள்ளது. ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். போலீஸ்காரர். இவரது மனைவி அனுசுயா மயில் (27). நிறைமாத கர்ப்பிணி. இவர்களது ஒன்றரை வயது மகன், அனுசுயா மயிலின் தாயார் சேதுலட்சுமி ஆகியோர், குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். நேற்றுமுன்தினம் காலை அப்பகுதிக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர், அவர்களை மீட்டு, மதுரைக்கு கொண்டு வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மயில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அதிகாலை சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

* திருச்செந்தூர் கோயிலில் சிக்கிய 400 பேர் மீட்பு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் வரலாறு காணாத மழையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். 2 நாட்களாக தவித்த அவர்களை நேற்று அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் நெல்லை அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

* 2 நாளுக்கு பின் திறக்கப்பட்ட பெட்ரோல் பங்க்
தூத்துக்குடி மாவட்டம் முற்றிலும் தண்ணீரில் தத்தளிப்பதால் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தது. 2 நாட்களுக்கு நேற்று பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டதால், வாகனங்களுக்கு பெட்ரோல் போட மக்கள் முண்டியடித்தனர். இதனால், திறக்கப்பட்ட குறைந்த அளவிலான பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது.

* மற்றொரு ஒன்றிய குழு நெல்லைக்கு இன்று வருகை
நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட ஒன்றிய குழுவினர் நேற்று வருவதாக இருந்தது. ஆனால் கேபிஎஸ் கில் தலைமையிலான அந்தக் குழுவினர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சென்று விட்டனர். அங்கு பெரும் சேதம் என்பதால் பல்வேறு பகுதிகள், சாலைகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மற்றொரு ஒன்றியக் குழு இன்று (21ம் தேதி) நெல்லைக்கு வருகிறது.

* ஏரலில் மீட்பு பணிக்கு சென்று சிக்கிய அமைச்சர் 3 நாட்களுக்கு பின் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கடந்த 17ம் தேதி சாத்தான்குளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பொக்லைன் இயந்திரத்தில் சென்று மீட்ட அமைச்சர் அவர்களை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்தார். தொடர்ந்து அங்கிருந்து ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாக ஏரல் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார்.

ஆனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஏரலுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அங்கு மின்சார வசதியும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்டது. செல்போன் சேவையும் செயல் இழந்தது. இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்த வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டார். கடும் வெள்ளம் காரணமாக அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேற முடியவில்லை. இந்நிலையில் தொலைத் தொடர்பு சேவைகள் நேற்று சீரானது. இதயைடுத்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர் படகு மூலம் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீட்டனர்.

* அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு வீரர்கள் மரங்களில் ஏறி தப்பினர்
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள் 20 பேர் 6 குழுக்களாக பிரிந்து சென்று ரப்பர் படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மந்திரமூர்த்தி, ராஜ்குமார் உட்பட 3 பேர் படகுகளுடன் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் நீச்சலடித்தவாறு தென்திருப்பேரை கரையோரத்திலுள்ள மரங்களில் ஏறி தஞ்சம் புகுந்தனர். இதனையறிந்த மீட்பு படையினர் படகுகள் மூலம் சென்று 3 வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.

* கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த கனிமொழி
தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் அதிக அளவு பாதிப்பை சந்தித்ததுள்ளது. தூத்துக்குடி எம்பியாக உள்ள கனிமொழி, மீட்பு பணி மற்றும் உதவிக்கு தொலைபேசி எண்களை வழங்கி உள்ளார். இந்த எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு, ‘தன்னுடைய வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் வெளியே வர முடியவில்லை. என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அதன்பேரில், கனிமொழி எம்.பி புஷ்பா நகரில் உள்ள கர்ப்பிணியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை மீட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கனிமொழியின் உதவிக்கு கர்ப்பிணியும், அவரது கணவரும் நன்றி தெரிவித்தனர்.

The post வெள்ளம் வடியாததால் தத்தளிக்கும் தூத்துக்குடிஒன்றிய குழு படகில் சென்று ஆய்வு: இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் சேதங்களை பார்வையிடுகின்றனர்; தீவுகளாக மாறிய ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல்; மீட்பு பணிகளில் அரசு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,Tiruchendur ,Aral ,Thoothukudi ,Arel ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்