×

கேரளாவில் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர்; தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருப்பத்தூர்: தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை, அதனை சந்திக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். திருப்பத்தூரில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் சிங்கப்பூரில் பரவி 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில் நோய் தொற்று ஏற்பட்ட 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு அடுத்த 3 நாட்களில் சரியாகி விடுகிறது என தெரியவந்தது.

தற்போது பக்கத்து மாநிலமான கேரளாவில் 200 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறையினர் கேரளாவிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இல்லாமல் இருந்து வந்தது. ஆங்காங்கே ஒன்று அல்லது இரண்டு பேருக்கு நோய் தொற்று இருந்தது. பின்னர் சிகிச்சை மூலம் குணமடைந்துவிட்டனர்.தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்றினால் தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் தற்போது 29 பேருக்கு கொரோனா தொற்று பரவி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அனைவரும் நல்ல முறையில் வீடு திரும்பி உள்ளனர். எனவே, கொரோனா நோய் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல், சளி, உள்ளிட்ட உபாதைகளால் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த வைரஸ் தொற்றுக்காக யாரும் அச்சப்படத்தேவையில்லை. இதனால் உயிரிழப்பும் ஏற்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post கேரளாவில் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர்; தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Tamilnadu ,Minister ,M. Subramanian ,Tirupattur ,Tamil Nadu ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்