×

காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல இந்தியா சதி; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை: மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல இந்தியா சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆதாரம் இருந்தால் ஆராயப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூ என்பவரை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் சேர்ந்து நிகில் குப்தா என்ற இந்தியர் முயற்சி செய்ததாக அமெரிக்கா அண்மையில் குற்றம்சாட்டியது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் மக்களவையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி முதன்முறையாக மவுனம் கலைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “இந்தியா சட்டத்தின் ஆட்சியில் அர்ப்பணிப்புடன் உள்ளது. அதை நம்புகிறது. இந்தியாவை சேர்ந்த குடிமகன் ஒருவர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இதற்கான ஆதாரங்கள் எதையும் கொடுத்தால் அதுபற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு பெரிய ஜனநாயக நாட்டின் உறவுகளை சீர்குலைக்க முடியாது. தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் அமெரிக்கா, இந்தியா உறவில் முக்கிய அங்கமாக உள்ளன. இந்த உறவை வலுப்படுத்த இருநாடுகளிடமும் ஆதரவு உள்ளன. இது நிலையான, முதிர்ச்சியடைந்த உறவு என்பதற்கான அறிகுறி” என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல இந்தியா சதி; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை: மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : India ,America ,PM Modi ,New Delhi ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்