×

20 ஆண்டாக அவமானங்களை சந்திக்கிறேன்: மோடி வேதனை

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தன்கர் போல திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி செய்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரியதால், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் நாடாளுமன்ற நுழைவாயில் படியில் அமர்ந்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டினார். அதைப் பார்த்து மற்ற எம்பிக்கள் சிரித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த விவகாரம் குறித்து துணை ஜனாதிபதி தன்கர் அவையிலேயே வருத்தம் தெரிவித்த நிலையில், பாஜ எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. துணை ஜனாதிபதியை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணை ஜனாதிபதி தன்கர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடி என்னை போனில் அழைத்து, சில மாண்புமிக்க நாடாளுமன்ற எம்பிக்களின் கேவலமான செயல் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தினார். அதுவும் புனிதமான நாடாளுமன்றத்திலேயே நடந்திருப்பது வருத்தம் அளிப்பதாக கூறினார். மேலும், 20 ஆண்டாக இதுபோன்ற அவமானங்களை அவர் எதிர்கொண்டு வருவதாகவும் துணை ஜனாதிபதிக்கே இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்பது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறினார். அதற்கு நான், ‘ஒரு சிலரின் கோமாளித்தனங்கள் கடமையை செய்வதில் இருந்தும், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்துவதில் இருந்தும் என்னை தடுக்காது. எந்த அவமானமும் என் பாதையை மாற்றாது’ என்றேன்’’ என கூறி உள்ளார். இதே போல, ஜனாதிபதி திரவுபதி முர்மு டிவிட்டர் பதிவில், ‘‘நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம்.

ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுதான் நாடாளுமன்ற பாரம்பரியம் என்று நாம் பெருமைப்படுகிறோம். அதை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்று கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை நேற்று காலை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் நேற்று பாஜ எம்பிக்கள் அனைவரும் 10 நிமிடங்கள் அமைதியாக எழுந்து நின்று துணை ஜனாதிபதிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது அவையில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மீது டெல்லி டிபன்ஸ் காலனி காவல் நிலையத்தில் வக்கீல் கவுதம் என்பவர் புகார் அளித்துள்ளார்.

The post 20 ஆண்டாக அவமானங்களை சந்திக்கிறேன்: மோடி வேதனை appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Trinamool Congress ,Vice President ,Dhankar ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...