×

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: குழுவாக செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லக்கூடிய அலிபிரி மலை பாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை அடித்து கொன்றது. அதற்கு முன்பு ஒரு சிறுவன் படுகாயத்துடன் மீட்கப்பட்டான். இதனையடுத்து கூண்டுகள் வைத்து அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே உள்ள நடைபாதை அருகே அடிக்கடி மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர். இதையடுத்து நேற்றிரவு முதல் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் மூங்கில் கம்பு வழங்கி வருகின்றனர். இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் கயிறுகளுடன் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பக்தர்கள் ஓரளவுக்கு திரண்டவுடன் அவர்களை குழுவாக அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பக்தர்கள் யாரும் தனியாக செல்லவேண்டாம், சிறுவர், சிறுமிகளை அழைத்துச்செல்லும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் எனவும் மலைப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: குழுவாக செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tirupathi mountain ,Thirumalai ,Leopard ,Tirupathi ,Tirupati Mountain ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...