×

துணை ஜனாதிபதியை எம்பிக்கள் கிண்டலடித்த விவகாரம்; ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் வேதனை: கருத்து தெரிவிக்க ராகுல்காந்தி மறுப்பு

டெல்லி: துணை ஜனாதிபதியை எம்பிக்கள் கிண்டலடித்த விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் வேதனை தெரிவித்த நிலையில், ராகுல்காந்தி தனது கருத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். நாடாளுமன்ற வளாகத்தில் 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திரிணாமுல் எம்பி ஒருவர், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை கிண்டலடிக்கும் வகையில் மிமிக்ரி செய்து காட்டினார். அதனை ராகுல்காந்தி வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நம்முடைய மதிப்பிற்குரிய துணை ஜனாதிபதி அவர்கள் அவமதிக்கப்பட்ட விதத்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்தும் விதமானது கண்ணியமாகவும், மரியாதைக்கு உரியதாகவும் இருக்க வேண்டும். நாடாளுமன்ற பாரம்பரியத்தை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடி நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் நடந்து கொண்ட விதத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டு, தனது கவலையை வெளிப்படுத்தினார்.

கடந்த இருபது ஆண்டுகளாக இதுபோன்ற அவமானங்களுக்கு தான் ஆளாகியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். இந்திய துணை ஜனாதிபதி போன்ற அரசியல் சாசன பதவியில் இருக்கும் என்னை போன்றவர்களை, அதுவும் நாடாளுமன்ற வளாகத்தில் அவமதித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அவரிடம் சொன்னேன். சிலரின் கோமாளித்தனமான செயல்கள் எனது கடமையை நிறைவேற்றுவதில் எவ்வித தடையும் செய்ய முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில், என்னால் உறுதியாக செயல்பட முடியும். அவமானங்கள் எதுவும் எனது பாதையை மாற்றாது’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, நேற்று நடந்த சம்பவம் குறித்தும், தனது வேதனையும் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து ராகுல்காந்தி கூறுகையில், ‘திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி விவகாரத்தில் துணை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி பேசியது குறித்து, நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை’ என்று கூறினார்.

The post துணை ஜனாதிபதியை எம்பிக்கள் கிண்டலடித்த விவகாரம்; ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் வேதனை: கருத்து தெரிவிக்க ராகுல்காந்தி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : MBS ,Vice President ,President ,Rakul Gandhi ,Delhi ,Speaker ,Rakulkhandi ,
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...