×

காவல் காக்கும் காவல் தெய்வங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* விழுப்புரம் மாவட்டம் தென்செட்டி ஏந்தலில் சடையப்பர் அருள்புரிகிறார். தன்னை பூஜித்த பூஜாரியை பொய் வழக்கிலிருந்து காக்க சாட்சி சொன்னவர் இவர்.

* கோயமுத்தூர் கருத்தம்பட்டியில் வாழைத்தோட்டத்து ஐயன் அருளாட்சி புரிகிறார். இங்கு புற்றுமண்ணே பிரசாதம். இந்த மண் விஷங்களை முறிக்கும் அருமருந்தாக நம்பப்படுகிறது.

* ஈரோடு, புதுப்பாளையத்தில் காமாட்சி அம்மை சமேத குருநாதசுவாமியை தரிசிக்கலாம். ஆலய நடுவில் உள்ள புற்று போன்ற குலுக்கை எனும் பூஜைப்பொருட்கள் உள்ள பெட்டகத்தை பூக்களால் பக்தர்கள் அர்ச்சிக்கிறார்கள். இதனால் தங்கள் தோட்டங்களில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷஜந்து பாதிப்பு ஏற்படுவதில்லை.

* கடலூர் மாவட்டம் மெய்யாத்தூரில் சொக்காயி சமேத திருவரசமூர்த்தி அருள்கிறார். இப்பகுதி மக்கள் புதிதாக வாங்கிய வாகனங்களையும், விதை நெல்லையும் இங்கு எடுத்து வந்து பூஜித்த பின்பே பயன்படுத்துகின்றனர்.

* ஈரோடு, காஞ்சிக்கோயிலில் சீதேவி அம்மனை தரிசிக்கலாம். ஆனிமாதம் 60 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வெண்ணிற ஆடை அணிந்து பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். கால்நடைகளைக் காக்க வெள்ளைகுதிரை ஒன்றும் அக்னி குண்டத்தில் இறங்குகிறது!

* தஞ்சாவூர், திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜருக்குத் தனிக்கோயில் உள்ளது. பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள், பொருட்களை திருடு கொடுத்தவர்கள் தங்கள் பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை எமன் சந்நதியில் பூஜித்து அங்குள்ள சூலத்தில் கட்டி விட்டால் சில நாட்களில் அவை திரும்பக் கிடைத்து விடுகின்றன. இந்த நடைமுறையை ‘படி கட்டுதல்’ என்கிறார்கள்.

* புதுக்கோட்டை, மாங்குடியில் நருவிழி அம்மன் சமேத சாத்தையனாரை தரிசிக்கலாம். இங்கு ஆடி மாத புரவி எடுப்பு திருவிழா பிரசித்தி பெற்றது. ஆடி மாத செவ்வாய்த் திருநாளில், சாத்தையனாருக்கு விசேஷ பூஜைகள் செய்து எருதுகட்டி எனும் மஞ்சுவிரட்டும் நடைபெறுகிறது.

* திருச்சி, மணப்பாறையில் மாமுண்டி எனும் நல்லாண்டவர் அருளாட்சி புரிகிறார். இவர் கருவறை அருகே உள்ள சந்நதியில் கொலுவிருக்கும், இவரின் சகோதரிகளாக பாவிக்கப்படும் சப்தகன்னியருக்கே இங்கே முதல் பூஜை.

* திருப்பூர், மேட்டுப்பாளையத்தில் நாட்ராயர்&நாச்சிமுத்து கோயில் உள்ளது. இங்கு தம் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், குதிரை, மனித சிலைகளோடு லாரி வாகன சிலை கூட உள்ளது! தீயசக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் சந்நதிமுன் வர, அந்த பாதிப்புகள் விலகுகின்றன.

* விருதுநகர் கோட்டையூரில் பூரணா, புஷ்கலாம்பா தேவியருடன் வைகுண்டமூர்த்தி தரிசனம் தருகிறார். இங்கு தர்மசாஸ்தா, ஐயனார் என இரு திருவுருவங்களோடு இறைவன் அருள்கிறார். மாசி மாத அமாவாசையை ஒட்டி பாரி வேட்டை விழா நடைபெறுகிறது.

* மதுரை அம்பலக்காரன்பட்டியில் வல்லடிக்காரர் அருள் புரிகிறார். இங்கு, பூதத்தின் தோள் மீது முன்னங்கால்களைத் தூக்கி வைத்தபடி காட்சி தருகிறது சேமங்குதிரை. ஆங்கிலேயர் ஒருவர் கேலி செய்ததால் அந்த சிலை புல்லைத் தின்று, கனைத்தும் காட்டியது. ஆகவே, வல்லடிக்காரருக்கு சமமாக வணங்கப்படுகிறது.

* கடலூர், திருநாரையூரில் தன் தேவியருடன் ஐயனார் அருள்பாலிக்கிறார். தன் பக்தர்களை ஆபத்துகளிலிருந்து காப்பதால் ‘மங்காமல் காத்த ஐயனார்’ என போற்றப்படுகிறார். பிரசவவலியால் துடித்த ஒரு பெண்ணிற்கு தாதியாக வந்து பிரசவம் பார்த்த பெருங்கருணையுடையவர் இந்த ஐயனார்.

* சிவகங்கை மாவட்டம், பெரிச்சி கோயிலில் இரட்டை முக பைரவரை தரிசிக்கலாம். நவபாஷாணத்தால் ஆன இவருக்கு சாத்தப்படும் வடைமாலையை பிரசாதமாகத் தருவதில்லை. சந்நதியின் மேலே எறிந்து விடுகின்றனர். அதை பறவைகளும் உண்பதில்லை. இவரின் பின்முகம், பைரவரின் சீடனான சனிபகவானை நோக்கியபடி உள்ளதால் அந்த முகத்தை பக்தர்கள் தரிசிக்க முடியாது.

தொகுப்பு: விஜயலட்சுமி

The post காவல் காக்கும் காவல் தெய்வங்கள் appeared first on Dinakaran.

Tags : Khadayapur ,Densetti Andal ,Viluppuram district ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...