×

கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன விழுப்புரம்; மக்களவை தொகுதியை கைப்பற்றப்போவது யார்?

விழுப்புரம் 13வது மக்களவைத் தொகுதியாகும். இந்த தொகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும். பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்ட விழுப்புரம் மாவட்டம், விவசாய பூமியாகத் திகழ்கிறது. கரும்பு விவசாயத்தில் தமிழகத்தின் முன்னோடியாக விழுப்புரம் மாவட்டம் திகழ்கிறது. இதற்கு அடுத்தப்படியாக கிரானைட் கற்கள் வெட்டப்படுவது உள்ளிட்ட தொழிற்கள் செய்யப்படுகிறது.

.இந்தத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராமசாமி படையாச்சி நீண்டகாலம் எம்பியாக இருந்திருக்கிறார். மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செஞ்சி ராமச்சந்திரன் 2 முறை எம்பியாக இருந்த தொகுதி இதுவாகும். பாமகவும் இந்தத் தொகுதியில் வென்றுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, திண்டிவனம் மக்களவைத் தொகுதி விழுப்புரம் தனித் தொகுதியாக மாறியது. இந்த மக்களவைத் தொகுதி இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. 2 முறை அதிமுகவும், ஒரு முறை விசிகவும்(திமுக கூட்டணி) வெற்றி பெற்றுள்ளது. விழுப்புரம், வானூர்(தனி), திண்டிவனம் (தனி), திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் போட்டியிட்டார். பாமக வேட்பாளரான வடிவேல் ராவணனைவிட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசியல் கட்சியை சேர்ந்த 7 வேட்பாளர்களும், சுயேட்சையாக 6 வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 7,40,412 ஆண் வாக்காளர்கள், 7,53,638 பெண் வேட்பாளர்களும், 209 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 14,94,259 வாக்காளர்கள் கொண்ட தனி தொகுதியாகும். திண்டிவனம் பொது தொகுதியாக இருக்கும் வரை காங்கிரஸ் கட்சியானது 4 முறை வென்றுள்ளது. 2024ம் ஆண்டு விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் விசிக வேட்பாளர் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், பாஜக சார்பில் பாமக வேட்பாளர் முரளி சங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் களஞ்சியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய எம்பியான ரவிக்குமாரை பொறுத்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒரளவு நிறைவேற்றியுள்ளார். இதற்கு முன்பிருந்த எம்பியை விட அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகக்கூடியவராக ரவிக்குமார் இருப்பது மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்துள்ளார். 200க்கும் மேற்பட்டோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கான உதவி தொகையை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளார். தொகுதி சார்ந்த செயல்பாடுகள் மட்டுமின்றி மாநில நலன், ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல் எனப் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளார். கீழ்புத்துப்பட்டில் உள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு மையத்தில் 440 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள், இருளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 61 முறை உரையாற்றியுள்ளார். அதே சமயம், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளதால் இங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. விவசாயம் சார்ந்த பண்ணைகள், தேஜஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விழுப்புரம் தொகுதியில் எந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி வாகையை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

The post கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன விழுப்புரம்; மக்களவை தொகுதியை கைப்பற்றப்போவது யார்? appeared first on Dinakaran.

Tags : Sugarcane ,Viluppuram ,Lok Sabha ,Viluppuram district ,Tamil Nadu ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...