×

குற்றவியல் மசோதா மக்களவையில் விவாதம்

புதுடெல்லி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக முறையே, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்கள் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இக்குழு, சில திருத்தங்களை பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் கடந்த 14ம் தேதி தொடங்கி 19ம் தேதி வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் விவகாரத்தில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக விவாதத்திற்கு மசோதாக்கள் கொண்டு வரப்படவில்லை.

இதற்கிடையே, மக்களவையில் நேற்று 49 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த புதிய 3 குற்றவியல் மசோதாக்களை மாலை 4.30 மணி அளவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக மக்களவை அலுவல் நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டது. அவையில் 3ல் 2 பங்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் இல்லாத நிலையில், பிஜூ ஜனதா தளம் போன்ற ஆளுங்கட்சிக்கு ஆதரவான எம்பிக்களை தவிர பெரும்பாலும் பாஜ எம்பிக்களே விவாதத்தில் பங்கேற்று மசோதாக்களை வரவேற்று பேசினர். பின்னர் இரவு 9 மணியுடன் மக்களவை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post குற்றவியல் மசோதா மக்களவையில் விவாதம் appeared first on Dinakaran.

Tags : House of Commons ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...