×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி விரைவில் தொடக்கம்: கருத்து கேட்பு கூட்டத்தில் தகவல்

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி, அடுத்த மாதம் தொடங்கப்பட்டு, ஒரு வருடத்தில் பணி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த ஒன்றிய அரசு ரூ.97.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள், மீனவ சங்கத்தினர், வியாபாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம், ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமை வகித்தார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், சென்னை துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் விஸ்வநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயமுருகன், சென்னை துறைமுக தலைமை பொறியாளர் ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காசிமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் நடைபெற்றால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தப்படும். இன்னும் அதிக அளவு மீன் விற்பனை அதிகரிக்க கூடும். நவீன மீன் விற்பனை கூடம், மீனை கொண்டு செல்ல சாலை வசதி, மீன்களை பதப்படுத்த கிடங்குகள், மீனவ மக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்விளக்குகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் காசிமேடு துறைமுகம் மேம்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 2025 பிப்ரவரி மாதம் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, பேசிய மீனவ சங்கப் பிரதிநிதிகள், ‘‘பொதுமக்கள் இந்த திட்டத்தை ஆதரித்து இந்த திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கூறினர். ஒரு சிலர் திட்டத்தில் உள்ள குறைகள் குறித்தும் கூறினர். மேலும் இதுபோல், ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்பு காசிமேடு பகுதியில் தமிழில் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். என்ன திட்டத்தை செய்கிறீர்கள் என்பது ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்தனர்.

The post காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி விரைவில் தொடக்கம்: கருத்து கேட்பு கூட்டத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kasimedu fishing harbor ,Thandaiyarpet ,Kasimedu ,Dinakaran ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு