×

விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த தரைமட்ட கிணறுக்கு பாதுகாப்பு வலை: பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மாமல்லபுரம்: தினகரன் செய்தி எதிரொலியால் மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த தரைமட்ட கிணறுக்கு பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில், ஐந்து ரதம் புராதன சின்னத்தின் மதில் சுவருக்கு அருகே ஒரு தரை மட்ட கிணறு உள்ளது. இந்த, கிணறு போதிய தடுப்பு வேலிகள் மற்றும் பாதுகாப்பு வலை இல்லாமல் திறந்த நிலையில் ஆபத்தான வகையில் அமைந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும்போது, நிலை தடுமாறி வாகனத்தோடு கிணற்றின் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது.

குறிப்பாக, இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஏரியாமல் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த சாலையில், கிணறு இருப்பது தெரியாததால், எளிதில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு சற்று அருகே உள்ள திறந்த வெளி கிணற்றால், அங்கு குழந்தைகள் விளையாட பெற்றோர் அனுமதிக்கவில்லை. மேலும், அங்கு மேய்ச்சலுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட ஆடு – மாடுகள் அந்த கிணற்றில் தவறி விழுந்தும், கால்கள் உடைந்து காயமடைந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், யாருக்கும் பயன்படாத நிலையில் உள்ள கிணற்றுக்கு போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து, தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோரின் உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் நேரில் சென்று, ஆபத்து ஏற்படும் வகையில் திறந்த நிலையில் உள்ள தரைமட்ட கிணறுக்கு ஊழியர்கள் மூலம் பாதுகாப்பு வலை அமைத்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிம்மதியடைந்தனர். மேலும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், பேரூராட்சி ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த தரைமட்ட கிணறுக்கு பாதுகாப்பு வலை: பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,ratham road ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...