×

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த தீர்ப்பு ரத்து: தண்டனை விவரம் 21ல் அறிவிக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடிமீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.  இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர். அரசு தரப்பில் ஐகோர்ட் வக்கீல் சண்முகம் வேலாயுதமும், பொன்முடி தரப்பில் வக்கீல்கள் டி.எஸ்.சுப்பிரமணியன், ராஜா, ஷெரிப், சுரேஷ் மற்றும் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். இந்த வழக்கில் நீதிபதி சுந்தரமூர்த்தி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ல் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. எனவே, அவர்களை விடுதலை செய்த விழுப்புரம் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரும் நாளை மறுநாள்(டிச.21ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அப்போது தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.

The post சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த தீர்ப்பு ரத்து: தண்டனை விவரம் 21ல் அறிவிக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmuy ,Chennai High Court ,Chennai ,Ponmudi ,Education ,Dimuka ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...