×

ஆன்மிகம் பிட்ஸ்: தீபாராதனையின் தத்துவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வேதப் புத்தகத்துக்கு ஒரு கோயில்

சீக்கியர்களின் வேதப் புத்தகத்திற்கு ‘கிரந்த் சாஹிப்’ என்று பெயர். இந்தப் புத்தகத்தை வைப்பதற்காகவே அமிர்தசரஸிலுள்ள ‘பொற்கோவில்’, இருபது கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்தப் புத்தகத்தை ஒரு அரசனுக்கு உரிய மரியாதைகளுடன் நடத்துகின்றனர். நைவேத்தியம் சமர்ப்பித்து, தங்கப்பிடி போட்ட மயிலிறகு விசிறிகளால் இடைவிடாது விசிறிக் கொண்டிக்க, பல பணியாட்கள் உள்ளனர். சலிப்பு ஏற்படாமலிருக்க வேதப் புத்தகத்திற்கு முன்பு இன்னிசைக் கருவிகள் ஒலிக்கின்றன.

தாய் – மகன் பிணக்கு தீர்க்கும் தலம்

கோவை மாவட்டம் – பொள்ளாச்சி நெகமம் அருகிலுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ளது `அம்மணீஸ்வரர்’ ஆலயம். அத்ரி மகரிஷியின் மனைவியான அனுசுயாதேவி தன் கற்பை பரிசோதிப்பதற்காக வந்த மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி பால் புகட்டிய பெருமை பெற்ற தலம். இங்கு விநாயகருக்கென தனி சந்நதி இல்லை. ஆனால், அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் பாதத்தின் கீழே, பீடத்தில் நான்கு விநாயகர்களுடன் முனிவர் ஒருவரும் தவம் செய்யக் காணலாம். இந்த அமைப்பு அபூர்வமானது. ஒரே சமயத்தில் அம்பாளையும் அவருக்குக் கீழே இருக்கும் விநாயகரையும் வணங்கினால் தாய்மகனுக்கிடையே உள்ள பிணக்கு தீரும் என்பது நம்பிக்கை. மேலும், கரு சுமந்த பெண்கள் இங்கு வழிபட, சுகப்பிரசவம் ஆகும் என்றும் நம்பப்படுகிறது.

தீபாராதனையின் தத்துவம்

தெய்வங்களுக்குப் பூஜையின் முடிவில் தீபாராதனை செய்யப்படுகிறது. இறைவன் ஜோதி சொரூபன் என்பதையும், அவர் பூர்ணஜோதியே என்பதையும், இது குறிக்கிறது. இறைவா! இவ்வண்டத்தின் சுயம்பிரகாசம் நீயே! சூரியன், சந்திரன், அக்கினியிலுள்ள பிரகாசம் நீயே! உனது தெய்வீகப் பிரகாசத்தை அருளி என்னிடமுள்ள இருளை அகற்றுவாயாக! எனது புத்தியைத் துலக்குவாயாக! என்று பக்தன் வேண்டுகிறான். இதுவே தீபாராதனையின் தத்துவம்.

சூரிய – சந்திர கிரகணக் காட்சிகள்

விதானம் என்பது குளிர்ந்த நிழல் பரப்புமிடம் என்று கருதுகின்றனர். அதையொட்டி விதானத்தில் சந்திரனை அமைக்கும் வழக்கம் வந்தது. அந்த சந்திரனில் மான் அல்லது முயல் வடிவத்தையும் சேர்த்து அமைத்தனர். பின்னாளில் வந்தவர்கள் சந்திரனை ராகு என்ற பாம்பும், சூரியனை கேது எனும் பாம்பும் பிடிக்கச் செல்வது போலவும் அமைத்தனர். இவற்றைக் கண்டு சிந்திப்பதன் மூலம் நம்மைப் பற்றத் தொடர்ந்து ஓடி வரும் வினைகள் அழியும் என நம்புகின்றனர்.

நிலைத்த இன்பம்

உயிர்களுக்கு நிலைத்த இன்பத்தை அருளுபவன் சிவபெருமான் ஒருவனே. உலகில் வேறு எதுவும் நிலையான இன்பத்தை அளிக்க வல்லதல்ல. ஏனெனில், அவ்வாறு அளிக்கும் பொருள், எப்போதும் அழியாது நிலை பெற்றிருக்க வேண்டும். அப்படி அழியாது என்றும் நிலைத்து இருப்பவர் சிவபெருமானே என்பதால், அவரே உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தர வல்லவர் ஆகிறார்.

எலி கேட்ட உபதேசம்

எலி என்றதும் நமக்கு விநாயகரின் வாகனமான பெருச்சாளி நினைவுக்கு வருகிறது. எலி வளையில் வாழ்வது. கீழ்மைக் குணம் கொண்டது உள்ளுறுப்பு வேலை செய்வது. மறைந்து நின்று சுயநலத்துடன் ஓயாது அழிப்பதைச் செய்யும் குறியீடாக உள்ளது. ஆனால், ஒரு எலி இறையருளால் ஞானம் பெற்றுப் பெருமானிடம் உபதேசம் கேட்டு மேன்மை பெற்றதைக் காண்கிறோம். புராணங்களில், இது பற்றிய குறிப்பு இல்லை என்றாலும், திருத்தணிகை வீரட்டேசுவரர் ஆலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தி வடிவத்தில் பாம்பு, மான் கூட்டத்துடன் ஓர் எலியும் அமர்ந்து ஞானம் கேட்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. பாம்பு எலியும் பகை கொண்டவை என்றாலும், இறைவன் சந்நதியில் ஒன்றாக அமர்ந்து ஞானம் கேட்பதைக் காண்கிறோம். இறைவனின் சந்நதி அமைதி, அன்பு, பகையின்மையின் இடமல்லவா!

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: தீபாராதனையின் தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Krant Sahib ,
× RELATED அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அட்சய திருதியை