×

நண்பனுக்காக களவழி நாற்பது!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நூல்கள் பல. அதுவும் தமிழ் நூல்கள், அளவிட முடியாத அளவிற்குப் பரந்து விரிந்து உள்ளன. அப்பழந்தமிழ் நூல்கள் ஒவ்வொன்றும் உருவான வரலாறுகள், ஆச்சரியம் ஊட்டக் கூடியவை. ஆச்சரியம் மட்டுமல்ல! அந்த வரலாறுகள் பல விதங்களிலும் மனித குலத்திற்குப் பாடம் புகட்டக் கூடியவைகளாகவே அமைந்துள்ளன. அந்த வரிசையில் ‘களவழி நாற்பது’ எனும் நூல் இங்கு இடம்பெறுகிறது.

களவழி நாற்பது எனும் இந்த நூலில், நாற்பது பாடல்கள் உள்ளன; ஒரு சில நூல்களில் நாற்பத்தொரு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு நூலும் உருவாக ஒவ்வொரு காரணம் உண்டு. இந்தக் களவழி நாற்பது எனும் நூல் உருவான காரணமோ, மிகவும் வித்தியாசமானது. கோடிக்கணக்காகக் கொட்டிக் கொடுத்தாலும், என்ன தான் ஆள் – அம்பு – சேனை – படை என வைத்து மிரட்டினாலும், பயந்து பணியாத தமிழ்ப் புலவர்களில் ஒருவரான பொய்கையார், இந்த நூலை உருவாக்கிய காரணம் விவேகமானது; விசித்திரமானது; உள்ளத்தை உருக்கக் கூடியது. பெரும் புலவரான பொய்கையார், தொண்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். சேர மன்னர் கணைக்கால் இரும்பொறையின் அரசவைப் புலவராக விளங்கியவர்.

சேர மன்னரைத் தன் உயிர் நண்பராகக் கருதியவர் பொய்கையார். அந்த மன்னருக்காகத் தன் கொள்கையைக்கூட விட்டுக் கொடுத்தவர் பொய்கையார். தாழ்ந்த நிலை வந்தபோதும் தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் பொய்கையார்; தன்மானம் மிகுந்தவர்; சொற் சுவையும் பொருட்சுவையும் உவமைப் பொருத்தமும் உள்ள பாடல்களைப் பாடுவதில் தலைசிறந்தவர்.

இவரது பாடல்களைப் பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்துக்காட்டும் அளவிற்குப் பெருமை வாய்ந்தவர். சேரமான் கணைக்கால் இரும்பொறை தொண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். வீரத்தில் தலைசிறந்த அந்த மன்னர் பெரும் கொடையாளி; தமிழில் தலைசிறந்த பாடல்கள் எழுதும் அளவிற்குப் புலமை உடையவர். புலவர்களை ஆதரிக்கும் நற்குணம் கொண்டவர். தன்மானம் மிகுந்தவர்.

ஒரு சமயம்… சேரமான் தன் பாசறையில் தங்கியிருந்தார். நடுநிசி நேரம்! மதம் பிடித்த யானை ஒன்று பாசறையில் புகுந்து, அங்குமிங்குமாக உலாவியது; ஏராளமான அழிவுகளை உண்டாக்கியது. அனைவரும் பயந்து சிதறி ஓடினார்கள். யானைப் பாகர்கள் பலர் வந்து, என்னவெல்லாமோ முயன்று பார்த்தார்கள். எதுவும் பலிக்கவில்லை. மன்னர் சேரமான் தகவல் அறிந்தார்; தன்னந்தனி ஆளாக நின்று யானையை எதிர்த்துப் போரிட்டு, அந்த யானையை அடக்கினார்; ‘‘யானை அடங்கி விட்டது. அனைவரும் அமைதியாகத் தூங்குங்கள்!’’ என்று சொல்லி அனைவருக்கும் அமைதியளித்தார். இந்த அளவிற்குப் பெரும் வீரம் கொண்டவராக இருந்த சேரமான், பகைவர்களிடம் சிறிதும் இரக்கமில்லாதவர்.

அவர் காலத்தில் மூவன் என்றொரு குறுநில மன்னன் இருந்தான். மறந்துபோய்க் கூடப் புலவர்களை மதிக்க மாட்டான் அவன்; அத்துடன் சேர நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகவும் இருந்தான். அந்தக் குறுநில மன்னனுக்கும், சேர மன்னர் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் மூண்டது. நடந்த போரில் சேரமன்னர், மூவனை வென்று அவன் பற்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து, தன் கோட்டை வாசல் கதவில் எல்லோரும் பார்க்கும்படியாகப் பதித்து வைத்தார். அதைக் கேள்விப்பட்ட சேரமானின் பகைவர்கள் எல்லாம் அவருக்கு அஞ்சி நடுங்கினார்கள்.

இந்த நிலையில், சேர மன்னரின் வீரத்தையும் அவரிடம் அவைக்களப் புலவராக இருந்த பொய்கையாரின் புலமைத்திறத்தையும் கேள்விப்பட்ட சோழப் பேரரசரான கோச்செங்கணான், சேர மன்னர் மீது பொறாமை கொண்டார். சோழ மன்னர், தன் பகைவனின் நண்பரும் அவைக்களப் புலவராகவும் இருந்த அந்தப் பொய்கையாரே, தன் புகழையும் வீரத்தையும் புகழ்ந்து பாட வேண்டும் என்று விரும்பினார்; தன் விருப்பத்தைத் தகுந்த தூதர்கள் மூலமாகப் பொய்கையாருக்குத் தெரியப்படுத்தினார்.

ஆனால், சோழப்பேரரசரின் விருப்பத்தை அறிந்த பொய்கையார், அந்த மன்னரைப் பாட மறுத்தார். காரணம்? தன் உயிர் நண்பனாகிய சேரமான் கணைக்கால் இரும்பொறையின் பகைவன் அந்தச் சோழப்பேரரசன் என்பதால்தான்! என்ன ஒரு நட்பு! என்ன ஒரு நட்பு! தன் நண்பனின் பகைவன் பேரரசனாக இருந்தாலும், அஞ்சாமல் அம்மன்னரைப் பாட மறுத்த பொய்கையாரின் புலமைத்திறம் மட்டுமல்ல; அவருடைய தூய்மையான நட்பின் ஆழமும் வெளிப்படும். அதன் காரணமாகவே, ‘‘என் நண்பனின் பகைவன் எனக்கும் பகைவனே’’ என்று கூறிப் பாட மறுத்தார் பொய்கையார்.

அதைக் கேள்விப்பட்ட கோச்செங்கணான், பெரும் சீற்றம் கொண்டார்; ‘‘எப்படியாவது என்னையும் என் வீரத்தையும் பொய்கையார் புகழ்ந்து பாடுமாறு செய்வேன்’’ என்று சபதம் செய்தார். ‘‘உடனே சேர மன்னரையும் பொய்கையாரையும் சிறைப்படுத்தி, அவர்களை என் விருப்பப்படி ஆட்டிப் படைப்பேன். சேனாதிபதி! படைகள் தயாராகட்டும். உடனே போர் மூளட்டும்!’’ என்று கட்டளையிட்டாார். தகவல் அறிந்த சேர மன்னரும் அஞ்சவில்லை; மதம் பிடித்த யானையை ஒற்றை ஆளாகவே எதிர்த்து நின்று வெற்றி பெற்றவரல்லவா அவர்! இருந்தாலும், ‘‘சோழ மன்னனின் எண்ணற்ற யானைகள் கொண்ட யானைப் படையை எதிர்த்து வெற்றி பெறுவது சுலபமல்ல! என்ன செய்வது? போரிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான்’’ என்று தீர்மானித்தார் சேரமன்னர்.

கழுமலம் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. (களவழி நாற்பது இவ்வாறு கூறுகிறது. புறநானூற்றில் இந்தப்போர் திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் நடந்ததாகக் கூறுகிறது) சேர மன்னரும் அவர் படைகளும் கடுமையாகப் போரிட்டனர். இருந்தும் சோழ மன்னர்தான் வென்றார். கோபம் தாங்காத சோழமன்னர், தான் வெற்றி பெற்றதும், சேரமான் கணைக்கால் இரும்பொறையைக் காலில் விலங்கிட்டுக் கடுஞ்சிறையில் அடைத்தார். ஆனால், புலவர் பொய்கையாரை மட்டும் சிறைப்படுத்தவில்லை. அவர் எப்படியாவது மனம்மாறித் தன்னைப் புகழ்ந்து பாடுவார் என்பது சோழ மன்னரின் எண்ணம். அதனாலேயே பொய்கையாரைச் சிறைப்படுத்தவில்லை.

சிறையில் இருந்த சேர மன்னர் ஒருநாள்… குடிப்பதற்கு நீர் கேட்டார். சிறைக் காவலர்களோ, சேர மன்னரையும் ஒரு சாதாரணப் போர்க் கைதியை நடத்துவதைப் போலவே நடத்தி அவமானப்படுத்தினார்கள். குடிக்க நீர்கேட்ட மன்னருக்கு உடனே நீர் தராமல் நீண்ட நேரம் ஆன பிறகு ஒரு சொம்பில் நீர்கொண்டு வந்து, சேர மன்னரிடம் நீட்டினார்கள். தண்ணீர்ச் சொம்பை வாங்கிய சேர மன்னர் நிலை கலங்கினார்; ‘‘ப்ச்! என்ன நிலை இது? ஒரு சாதாரண சிறைக்காவலன்கூட, என்னைச் சிறிதும் மதிக்க வில்லையே! எவ்வளவு தாழ்ந்தநிலை எனக்கு! மானம் அழிந்தபின் இன்னும் நான் உயிருடன் இருக்கிறேனே! இனிமேல் நான் வாழமாட்டேன்’’ என்று வாய்விட்டுச் சொன்ன மன்னர், தன்கையிலிருந்த தண்ணீரைக் குடிக்காமல் அப்படியே கீழே வைத்தார்.

இறக்கத் தீர்மானித்த மன்னர், எழுத்தாணியை எடுத்து ஓர் ஓலையில் ஒரு பாடலை எழுதினார். அப்பாடலைத் தன் உயிர் நண் பரும் அவைப் புலவருமான பொய்கையாருக்கு அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். ‘மானம் போன பின் வாழாமை முன் இனிதே!’ என்ற வாக்கிற்கு உதாரணமாக வாழ்ந்த சேர மன்னர் கணைக்கால் இரும் பொறை இறந்து போனார். மன்னர் எழுதிய பாடலின் கருத்து; ‘‘குழந்தை, ஒரு தாய் வயிற்றிலேயே இறந்து பிறந்தாலும்; முழு உருவம் பெறாத மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் சரி! அவை ஆளல்ல’’ என்று கருதாமல், வீரக்குடியில் பிறந்தவர்கள் அவற்றையும் வீரவாளால் பிளந்து விழுப்புண் உண்டாக்கி, வீர சொர்க்கம் புகச் செய்வார்கள். இதில் அரசர்கள் தவற மாட்டார்கள்.

‘‘அப்படியிருக்க அரசர் குடியில் பிறந்தும் பகைவர்களின் வாளால் பிளக்கப்பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாய் போலக் கால் விலங்கால் கட்டப்பட்டு; சிறைக்காவலர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களால் அவமதிக்கப்பட்டும், பகைவர்கள் உபகாரமாகக் கொடுத்த தண்ணீரை யாசகம் கேட்டாவது குடிக்க மாட்டேன் எனும் மன வலிமையில்லாமல், வயிற்றுத்தீயைத் தணிக்க யாசகம் கேட்டு உண்ணும் அளவிற்கு அரசர்கள் செயல்படுவார்களா? மாட்டார்கள்’’- என்பதே அப்பாடலின் கருத்து.

மன்னரின் மனநிலை இது. அவரை தன் உயிராகவே நினைத்த புலவர் பொய்கையாரின் நிலை? நண்பனான சேரமான் சிறைச்சாலையில் துன்பப்படுவதை அறிந்த பொய்கையார், மிகவும் வருந்தினார். நண்பனை எப்படி விடுதலை செய்வது என்று எண்ணியெண்ணி நெஞ்சு புண்ணானார். அதே நினைவில் இருந்த புலவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது; ‘‘சோழ மன்னன் இதற்கு முன்னமே தன்னைப் புகழ்ந்து பாடுமாறு ஆளனுப்பினான். நாம் மறுத்தோம். இன்றோ, அந்த மன்னன் எல்லோரும் அறியும்படியாகத் தன் வீரத்தை வெளிப்படுத்திவிட்டான். அந்தச் சோழன் என் நண்பனின் பகைவன்தான்! அதனால் எனக்கும் பகைவன்தான்!

‘‘இருந்தாலும், அந்தச் சோழனின் வீரத்தை நான் புகழ்ந்து பாடினால், அவன் நான் விரும்பிய பரிசை மறுக்காமல் தருவான்.’’‘‘அப்போது, ‘சேர மன்னனைச் சிறையிலிருந்து விடுலை செய்வதே நான் விரும்பும் பரிசு!’ எனக் கேட்டு, நம் நண்பன் சேர மன்னனைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இதுவே சரியான வழி!’’ என்று தீர்மானித்தார் பொய்கையார்.

சோழச் சக்கரவர்த்தியே வேண்டுகோள் விடுத்தும் அவரைப் புகழ்ந்து பாடச் சம்மதிக்காத பொய்கையார், இப்போது வலுவில் பாடுவதாகத் தீர்மானிக்கக் காரணம்? நண்பனை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகவே! சோழ மன்னன் போர்க்களத்தில் பெற்ற வெற்றியைப் பாட முடிவுசெய்த பொய்கையார், உடனே ஒருசில நாழிகைகளில் ‘களவழி நாற்பது’ எனும் நூலைப் பாடினார். பாடிய நூலைக் கொண்டுபோய்ச் சோழ மன்னர் அரசவையில் அரங்கேற்றச் சென்றார்.

அத்தகவலை அறிந்த சோழ மன்னர், ‘‘நம் எண்ணம் நிறைவேறியது. பாட மாட்டேன் என்று மறுத்த புலவர், இப்போது நம்மைப் புகழ்ந்து பாடுகிறார் என்றால், நம் எண்ணம் நிறைவேறியது என்பதுதானே சரி!’’ என நினைத்தார். பொய்கையார் அரங்கேற்றத்தைத் துவங்கினார்; பாடல்களை எல்லாம் முழுமையாகப் பாடிவிட்டு, பிறகு ஒவ்வொரு பாடலாகப்பாடி விளக்கம் சொன்னார். அவையில் இருந்தோர் அனைவரும் வியந்தார்கள். காரணம்.. களவழி நாற்பது எனும் அந்த நூல், உள்ளது உள்ளபடி மிகவும் அழகாகப் போர்க்கள நிகழ்ச்சிகளை நேர்முகமாக ஒலி – ஔிபரப்பு செய்வதைப் போல, இருந்தது. கேட்டோர் ஏன் வியக்க மாட்டார்கள்!

அவையினர் வியந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அரசரான சோழ சக்கரவர்த்தியே வியந்தார். அவருக்கு என்னவோ அப்போது போர்க்களத்தில் இருப்பதாகவே தோன்றியது; அவையில் இருப்பதான எண்ணமேயில்லை; மெய் மறந்தார். அரங்கேற்றம் முடிந்தது.சோழச் சக்கரவர்த்தி, பொய்கையாரை வாயாரப் புகழ்ந்தார். ஏராளமான பொன்னையும், மணியையும் பரிசுகளாகக் கொட்டிக் குவித்து, அவற்றை ஏற்குமாறு பொய்கையாரை வேண்டினார். பொய்கையாரோ, மன்னர் அளித்த செல்வங்கள் எதையும் தொடவில்லை; தலைநிமிர்ந்து சக்கரவர்த்தியை ஒரு பார்வை பார்த்தார். அதைக் கண்ட சக்கரவர்த்தி, ‘‘புலவர் பெருமானே! எடுத்துக் கொள்ளுங்கள்! இவை போதாதென்றால் இன்னும் அள்ளிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

கேளுங்கள்!’’ என்றார். புலவர் பதில் சொன்னார்; ‘‘மன்னா! இந்த அற்பமான பொருட்களுக்காகவா, என் நண்பனின் பகைவனான உங்களைப் புகழ்ந்து பாடுவேன்? இல்லை மன்னா! இல்லை! ஒருக்காலுமில்லை!’’ என்றார். அதைக் கேட்ட சோழ சக்கரவர்த்தி செங்கணானின் ஏற்கனவே சிவந்த கண்கள் மேலும், சிவந்தன. ‘‘பின் எதற்காகப் பாடினீர்கள்?’’ எனக் கேட்டார் அவர். புலவர் சற்றும் பின்வாங்க வில்லை; ‘‘சோழமன்னா! நான் வேண்டிவந்த பரிசு இவையல்ல. என் ஆருயிர் நண்பனான சேர மன்னனின் விடுதலைதான், நான் வேண்டும் பரிசு! சிறையில் இருந்து என் நண்பனை விடுவித்து, உங்கள் இருவருக்கும் நட்பு உண்டாக்கவே இந்தக் ‘களவழி நாற்பது’ எனும் நூலைப் பாடினேன் நான்’’ என்று பதில் சொன்னார்.

மன்னர் திகைத்தார்; ஒருசில விநாடிகள் சிந்தித்தார். அவர் கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. ‘‘புலவர் பெருமான் பொய்கையாரே! அரசர்களாகிய நாங்கள் எப்போதும் போரை விரும்பி, உலகின் அமைதியைக் கெடுக்கிறோம். புலவர்களாகிய நீங்களோ, போரை விலக்கி நாட்டில் அமைதி நிலவுவதற்காக நல் தொண்டு ஆற்றுகிறீர்கள். உங்கள் எண்ணம் நல்லது.

‘‘மேலும் நட்புக்கடன் கழிக்க உங்கள் மனப்போக்கையும் மாற்றிக் கொண்டீர்கள். நீங்கள் விரும்பும் பரிசும் நியாயமானதே! உங்கள் நண்பரான சேரமான் கணைக்கால் இரும்பொறை, இனி எனக்கும் நண்பர்தான். வாருங்கள்! இப்போதே போய் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து விடுதலை செய்து சிறப்பாக அழைத்து வருவோம் வாருங்கள்!’’ என்ற சோழச் சக்கரவர்த்தி, பொய்கையாரையும் கையோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டார். ஒருசில முக்கியஸ்தர்கள் பின்தொடர, செங்கணானும் பொய்கையாரும் நேராகச் சிறைச்சாலைக்குச் சென்றார்கள். ஆனால், அவர்கள் ஆர்வம் நிறைவேற வழியில்லையே! சிறைச்சாலைக் காவலன் ஒருவன், சேரமான் எழுதிய ஓலையைப் பொய்கையாரிடம் அளித்தான்.

அந்த ஓலையில் இருந்த பாடலைப் படித்த பொய்கையார், தன் எண்ணமும் ஆற்றலும் வீணாகப் போனதாக உணர்ந்தார். நெருங்கிய நண்பனான சேரமான் கணைக்கால் இரும்பொறை இறந்துபோன தகவலை அறிந்தார். துக்கம் தாளவில்லை; கதறத் தொடங்கிவிட்டார். ‘‘மானம் காத்த மன்னா! என்ன நினைத்து என்ன செய்துவிட்டாய் நீ! விரைவில் உனக்கு விடுதலை பெற்று வந்தேனே! அந்தோ! விடுதலை என்பது ஒருவரைக் கேட்டுப் பெறு வதும் அன்று; அல்லது ஒருவர் கொடுக்கப் பெறுவதும் அன்று என்று நினைத்து, நீயே உண்மையான விடுதலையை நாடிப்போய் விட்டாயா?

‘‘இரும்பொறையே! இன்னும் சிறிது நேரம் இரும் பொறை (பெரிய பொறுமை) கொண்டிருக்கக் கூடாதா? நம் பெருமையும் சிறப்பும் அழிய வந்த இடத்தில், உடம்பை வளர்க்கும் வாழ்க்கை எதற்கு என்று எண்ணி, இவ்வாறு செய்துவிட்டாயா? ‘‘நண்பா! இனி என்னைப் பார்க்க மாட்டாயா? ஆகா! முன்னமே இந்தச் சோழ மன்னனை நான் புகழ்ந்து பாடியிருந்தால், உனக்கு இந்த நிலை வந்திருக்குமா? அச்சோ! உனக்கு நானே யமனாகப் போய் விட்டேனே!’’ என்று வாய்விட்டுப் பலவாறாகப் புலம்பினார் பொய்கையார்.

அதையெல்லாம் பார்த்தும் கேட்டுக் கொண்டிருந்த சோழச் சக்கரவர்த்தி, கலங்கினார். ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் அழிந்ததை நேரில் கண்டும் கலங்காத சக்கரவர்த்தியின் கண்கள், பொய்கையாரின் புலம்பலைக் கேட்டு கண்ணீர் சிந்தின; ‘‘என்னால் தானே இவ்வளவு துயரங்கள் விளைந்தன?’’ என்று எண்ணித் தலைகுனிந்தார்.என்ன சொல்லி என்ன செய்ய? உள்ளம் நடுங்கும் படியாகக் கடுமையும் கொடுமையும் உடைய போர்க்களக் காட்சிகளைக் கூறி வீரச்சுவையை விளக்கும் “களவழி நாற்பது’ உருவான வரலாறோ, கண்ணீர் வடிக்கும் அளவிற்கு அமைந்துவிட்டது.

பொய்கையார் களவழி நாற்பது எனும் இந்நூலின் மூலம் கோச்செங்கணானின் வெற்றியைப் புகழ்ந்தாலும்; நாற்பது பாடல்களிலும் பொதுவாகச் சோழன் பெயரைப் புனல் நாடன் – நீர்நாடன் – காவிரி நாடன் – சேய் – செங்கண் சினமால் எனப் பலவாறு புகழ்ந்து சொல்லி, அவன் தன் பகைவரை வென்றான் என்று சொல்கிறாரே தவிர, ஓர் இடத்தில்கூட, தன் நண்பனான சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சோழ மன்னன் வென்றான் என்று குறிப்பிடவில்லை.

மிகவும் நுணுக்கமாகப் படித்து உணர வேண்டிய நூல் இது. பகைவர் என்பதைக் குறிக்க, தப்பியார் பிழைத்தார் புல்லார் தெவ்வர் நண்ணார் நேரார் கூடார் உடற்றியார் செற்றார் அடங்கார் நன்னார் மேவார் காய்ந்தார் துன்னார் எனப் பலவிதமான அருந்தமிழ்ச் சொற்களை இந்த நூலில் பொய்கையார் எழுதியிருக்கிறார். கார்த்திகைத் தீபத் திருவிழாவின் போது வரிசையாக ஏற்றி வைக்கப்படும் தீபங்களை இந்த நூல் ‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்ற’ என இந்நூல் பாடுகிறது. சந்திர கிரகணம் பற்றிய தகவலும் இந்நூலில் ‘கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே’ என இடம் பெற்றுள்ளது. தமிழ்ச்சுவை அறியவும் போர்க்களக் காட்சிகளின் நேர்முக வர்ணனையை அனுபவிக்கவும், `களவழி நாற்பது’ எனும் இந்நூல் உதவி செய்கிறது.

தொகுப்பு: பி.என். பரசுராமன்

The post நண்பனுக்காக களவழி நாற்பது! appeared first on Dinakaran.

Tags :
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்