×

Take a Book, Donate a Book!

நன்றி குங்குமம் தோழி

தொழில்நுட்பம் அதிகரிக்க மறுபக்கம் மக்களிடம் அதிகமாக குறைந்துகொண்டே வரும் ஒரு பழக்கம் புத்தகம் வாசிப்பது. ஒருவருக்கு தேவையான அனைத்தும் நொடியில் கிடைக்க உதவும் தொலைபேசி இருப்பதால், உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் விஷயங்களை அதன் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். இதற்காக புத்தகங்களை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை என்பதால், புத்தகம் வாசிப்பது குறைந்து கொண்டே வருகிறது.

என்னதான் தேவையான விவரங்களை இயந்திரங்கள் மூலம் படித்தாலும், கைகளில் புத்தகங்களை கொண்டு வாசிப்பது போல் ஆகாது. இதனை இந்த தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையிலும், புத்தகங்களின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லும் விதமாகவும் மேலை நாடுகளில் பின்பற்றும் ஒரு வழிமுறையினை பின்பற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த கமலி, ஜெயக்குமார் தம்பதியினர்.

‘அகம் புதிதாக உதவுவது புத்தகம்! அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம்!’ என்னும் இரா.ரவியின் வார்த்தைகளை உணர்த்தும் வகையில் தன் இல்லத்தில் ஒரு இலவச நூலகம் அமைத்து அனைவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றனர் இந்த தம்பதியினர். ‘‘நான் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நிர்வாக பதவியில் இருக்கிறேன். எனக்கும் என் மனைவிக்கும் புத்தகம் படிக்க ரொம்ப பிடிக்கும்’’ என்று பேசத் துவங்கினார் ஜெயக்குமார்.

எங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பதால், எங்க பசங்களும் எங்களைப் பார்த்து புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சாங்க. அவங்க எந்த புத்தகம் கேட்டாலும், நாங்கள் வாங்கிக் கொடுத்திடுவோம். சின்ன வயதில் துவங்கிய இந்த பழக்கம், இன்றும் தொடர்கிறது. இலக்கிய புத்தகங்கள் முதல் ஆங்கில இலக்கணம் வரை அனைத்து வகையான புத்தகங்களும் எங்க பசங்க படிப்பாங்க. அவர்கள் படித்த பிறகு அந்த புத்தகங்கள் எல்லாம் எங்க வீட்டில் சும்மா தான் இருக்கும்’’ என்றவரை தொடர்ந்தார் கமலி.

‘‘இந்த ‘லிட்டில் ப்ரீ லைப்ரரி’ யோசனைக்கு காரணம் என் கணவர் அமெரிக்கா போன போதுதான் ஏற்பட்டது. என் மகன் அமெரிக்காவில் இருப்பதால் அவரைப் பார்க்க என் கணவர் அங்கு சென்றிருந்தார். அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் லிட்டில் ப்ரீ லைப்ரரி பழக்கம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். வீட்டின் முன் தபால் பெட்டி போல் ஒரு பெட்டி அமைத்து அதில் சின்னச்சின்ன ரேக்குகள் போல் அமைத்திருப்பாங்க.

அதற்குள் அவர்கள் படித்த புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். புத்தகம் படிக்க விரும்புபவர்கள் இதில் இருந்து படிக்க கொண்டு போகலாம். முழுதும் இலவசம். அவ்வாறு படிக்க எடுத்து செல்பவர்கள் படித்து முடித்துவிட்டு புத்தகங்களை மீண்டும் வைக்கும் போது, தங்களிடம் இருக்கும் புத்தகத்தையும் சேர்த்து வைப்பார்கள். இதை பார்த்த என் கணவருக்கு, எங்க வீட்டிலும் இப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் முற்றிலும் மறந்துவிட்டது. அதை மீட்க வேண்டும் என்று விரும்பினார்.

இந்தியாவிற்கு திரும்பியவர் இதுபற்றி சொன்ன போது, எனக்கும் அந்த ஐடியா பிடிச்சிருந்தது. நாங்க படிச்ச புத்தகங்களை எங்களின் நண்பர்களுக்கும் படிக்க சொல்லி யோசனை சொன்னோம். ஆனால், முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் புத்தகங்களை படிக்க எடுத்துக் கொடுப்பது என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அதனால் முதலில் இந்த திட்டத்தினை சென்னையில் யாரேனும் பின்பற்றுகிறார்களான்னு சர்வே எடுத்திருந்தார். அதில் ஒருவர் இதேபோல் நூலகம் அமைத்து அதனை பின்பற்ற முடியாமல் மூடி விட்டது குறித்து தெரிந்துகொண்டோம். அதன் பிறகு எப்படியாவது இந்த நூலகம் அமைக்க வேண்டும் என்று அதன் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டோம். இரண்டு வருட உழைப்பிற்கு பிறகு இந்தாண்டு மே மாதம் தான் லைப்ரரியை துவங்கினோம்’’ என்றார் கமலி.

‘‘இங்கு எல்லாவிதமான புத்தகங்களும் இருக்கும். குழந்தைகளின் நீதிக்கதைகள், சித்திரம் புத்தகங்கள், பள்ளி பாடப் புத்தகங்கள், சிறுகதைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான அறிவியல் சார்ந்த புத்தகங்கள், இலக்கிய வரலாறுகள், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கண இலக்கியங்கள், கவிஞர்களின் நாடக புத்தகங்கள், இசை சார்ந்த புத்தகங்கள் என அனைத்தும் இருக்கும். ஆரம்பத்தில் பள்ளி பாடப் புத்தகங்களும் வைத்திருந்தோம். ஆனால் குழந்தைகள் பள்ளியிலும் அதைப் படித்து, வீட்டிலும் இதை படிக்கணுமா என்ற கேள்வி வந்தது. மேலும் இவை அவர்களின் வாசிக்கும் ஆர்வத்தை குறைப்பதாகவும் தோன்றியது. அதனால் பள்ளி பாடப் புத்தகங்களை நீக்கிவிட்டோம்.

நாங்கள் இதை ஆரம்பிக்க முக்கிய நோக்கம் இந்த காலத்தில் இருக்கும் இளம் தலைமுறையினர் அனைவரும் மொபைல் போன், லேப்டாப் என கேஜெட்ஸ்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதிலிருந்து கொஞ்ச நேரம் தங்களை விலகி வைத்துக் கொள்ள புத்தகங்கள் உதவும். புத்தகங்கள் வாசிப்பதால் ஏற்படும் பல நன்மைகளை மக்கள் அறிய தவறுகின்றனர். வாசிப்பதால், மொழித்திறன் மட்டும் வளராது, மனதும் ஒருமுகப்படும், பகுத்தறிவு பெறுகும், மன அழுத்தம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

நாங்க இந்த நூலகம் ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்க குடியிருப்பு பகுதியில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி படிக்கும் மற்றும் வேலைக்கு போகும் இளம் தலைமுறையினர் அதிகம். அவர்களுக்கு இந்த கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. அவர்களுக்கு கிடைக்கும் நேரங்களில் இங்கு வந்து புத்தகங்களை எடுத்து செல்வதோடு, அவர்களிடம் இருக்கும் புத்தகங்களையும் பிறர் படிப்பதற்காக இங்கு கொடுத்துட்டு போவாங்க. சுனாமியில் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் எங்க பகுதியில் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களால் புத்தகங்களை வாங்கி படிக்க முடியாது. அவர்களுக்கு இந்த நூலகம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது’’ என்றார் ஜெயக்குமார்.

‘‘எங்களின் டேக் லைன் ‘‘Take a book, Donate a book” என்பது, சிலர் இதனை கடைப்பிடித்து, புத்தகங்களை எடுத்து சென்று படித்துவிட்டு அதை திரும்ப வைக்கும் போது வேறொரு புத்தகத்தை கொண்டு வந்து தருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இங்கிருந்து எடுத்து போகும் புத்தகத்தையே திரும்ப கொண்டுவருவதில்லை. இதனால் பல புத்தகங்கள் காணாமலும் சென்றுள்ளது. இந்த செயல் சிறிது வருத்தமளித்தாலும், இலவசம் என்று சொன்ன பிறகு இவற்றை எல்லாம் கடந்து தான் வர வேண்டும் என பக்குவப்படுத்திக் கொண்டோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம், எங்களிடம் இருந்து காணாமல் போன புத்தகத்திற்கு இரண்டு மடங்கு புத்தகங்கள் எங்களிடம் வந்து சேர்ந்ததுதான். எங்களால் முழு நேரமும் நூலகத்தில் செலவிட முடியாது. அதனால் காலை அவர் அலுவலகத்திற்கு செல்லும் முன் புத்தகங்கள் இருக்கும் அலமாரியை சுத்தம் செய்து என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது என கணக்கெடுப்பார். மாலை மீண்டும் எல்லாம் சரியாக உள்ளதான்னு பார்ப்பார். அவர் ஊரில் இல்லாத நேரத்தில் நான் பார்த்துக் கொள்வேன். இங்கு வரும் சிலர் அவர்களே புத்தகங்களை கொண்டு வந்து தருவாங்க. ஒரு சிலர் எங்களை வந்து வாங்கிக்க சொல்லுவாங்க. இன்னும் சிலர் கூரியர் அனுப்புவாங்க.

அதனால் மற்ற நாட்களில் நூலகத்திற்காக செலவிட முடியாத நேரத்தை விடுமுறை நாட்களில் செலவிடுவோம். மேலும் தங்களிடம் உள்ள புத்தகங்களை இங்கு வழங்க விரும்புபவர்கள் நேரில் கொண்டு வந்து தரலாம், அல்லது கூரியர் கூட செய்யலாம்’’ என கேட்டுக்கொண்டனர். ‘‘சாதாரண நாட்கள் மட்டுமில்லாமல் மழைக் காலத்திலும் புத்தகம் படிக்க எடுத்து செல்ல வருகிறார்கள். அதுதான் இந்த நூலகத்தின் வெற்றின்னு நான் சொல்வேன். எங்க பசங்களுக்காக வாங்கிய புத்தகங்களை கொண்டு தான் இந்த நூலகத்தை துவங்கினேன். இப்போது 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்குள்ளன. இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்’’ என்றனர் நூலக தம்பதியினர்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post Take a Book, Donate a Book! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!