×

நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: காந்தி சிலை முன் போராட்டத்தில் குதித்தனர்!!

டெல்லி : நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், மக்களவையில் கடந்த 13ம் தேதி பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த 2 வாலிபர்கள், எம்பிக்கள் பகுதிக்குள் குதித்து கலர் புகை குண்டுகளை வீசி பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மக்களவையில் நுழைந்த 2 பேருக்கும் மைசூரு பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் கொடுத்திருப்பதால் இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த 14ம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தியதற்காக, திமுக எம்பிக்கள் 6 பேர் உட்பட மக்களவையில் 13 எம்பிக்களும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்பி டெரிக் ஓ பிரையனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று மக்களவை கூடியதும், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து கண்டனத்தை பதிவு செய்த சபாநாயகர் ஓம்பிர்லா, இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை எம்பிக்களிடம் விளக்கினார்.

அவரது பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி கட்சி எம்பிக்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு குறைபாட்டிற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டுமெனவும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதே விவகாரத்தில் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவையில் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநிலங்களவை தொடங்கிய போது, 45 எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் பெயரை வாசித்த அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், குரல் வாக்கெடுப்பு மூலம் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுவரை இந்தக் கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில், ஒரு கூட்டத் தொடரில் இத்தனை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 92 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: காந்தி சிலை முன் போராட்டத்தில் குதித்தனர்!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Gandhi ,Delhi ,Parliamentary Winter Session ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...