×

ஜெயங்கொண்டத்தில் ஐயப்ப சாமி மின் அலங்கார தேர் பவனி

ஜெயங்கொண்டம்,டிச.18: ஜெயங்கொண்டத்தில் ஐயப்ப சாமி மின் அலங்கார தேர் பவனி வான வேடிக்கையுடன் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுவது வழக்கம். கார்த்திகை முதல்நாள் முதல் ஐயப்பனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஐயப்பன் சுவாமிக்கு மார்கழி மாதம் 1ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதம் 1ம் தேதி ஐயப்பனுக்கு மேளதாளத்துடன் சிறப்பு நெய் அபிஷேகம் மற்றும் மஞ்சள், சந்தனம் பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஐயப்பன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கேரள ஜெண்டை மேளம் முழங்க, வானவேடிக்கையுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அம்மன், அய்யப்பன், சிவன், பார்வதி உள்ளிட்ட சாமிகள் பல அவதாரங்களில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை  மணிகண்ட ஐயப்ப சேவா சங்கம் குருசாமி சக்திவேல் மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட குழுவினர் செய்து இருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கோன் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் (பொ) தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஹிராபானு, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post ஜெயங்கொண்டத்தில் ஐயப்ப சாமி மின் அலங்கார தேர் பவனி appeared first on Dinakaran.

Tags : Ayyappa Swamy ,Bhavani ,Jayangkonda ,Jayangondam ,Ayyappa Sami E-Mornaka ,Ayyappa Swami ,Ther Bhavani ,
× RELATED ரத்னம் விமர்சனம்