×

பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசன கட்டணம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிகோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவத் திருக்கோயில்களிலும் வருகின்ற 23ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயிலில் கடந்த ஆண்டு 50,000க்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று கோயிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

டி.பி. கோயில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள், 70 வயது நிரம்பிய முதியோருக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை இரண்டரை மணிக்கு 1,500 பக்தர்களையும் உபயதாரர்கள் 850 பேரையும் அனுமதிப்பதென்று முடிவு எடுக்கப்பட்டது. காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரை பொது தரிசனம் தான் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட இருக்கின்றது. சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது. பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில், உரிய சிகிச்சை அளிப்பதற்காக கோயிலுக்கு உள்ளேயும், வெளியிலும் 6 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது. காவல்துறை சார்பில் 2 துணை ஆணையர் தலைமையில் 3 ஷிப்ட்களாக, 18 உதவி ஆணையர், 54 காவல் ஆய்வாளர், 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தளவில் கனக சபை தரிசனத்திற்கு நீதியரசர்கள் தடை விதிக்கவில்லை, விசேஷ நாட்களில் கனக சபையின் மீதேறுவதில் அசவுகரியம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆனால் அதையே காரணம் காட்டி கனக சபை மீதேறி தரிசனம் செய்வதற்கு தடை செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இருக்கின்றதோ அந்தந்த கோயில்களில் விழா காலங்களில் குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து சிறப்பு தரிசனத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கு முயற்சிக்கும். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் பார்த்தசாரதி கோயிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாசுரம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசன கட்டணம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : VAIGUNTA EKADASI ,PARTHASARATHI TEMPLE ,MINISTER ,SEKARBABU ,Chennai ,Thiruvallikeni Parthasarathi Temple ,Vaikunda Ekadasi ,Shekarbabu ,Parthasarati Temple ,Sekharbhabu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...