×

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு ஆடுகள் விலை உயரும்: எதிர்பார்ப்புடன் இருப்பதாக வியாபாரிகள் தகவல்

கே.வி.குப்பம், டிச.19: கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், ஆடுகள் விலை சரிந்திருந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்தடுத்த வாரங்களில் ஆடுகள் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்புடன் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் திங்கட்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது. தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் இருந்தும், குடியாத்தம், காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

மேலும் லோடு வேன்கள், ஆட்டோக்கள் மூலம் கொண்டுவரப்பட்ட ஆடுகளை சிலர் ₹4 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை விலை பேசி வாங்கி சென்றனர். சராசரியாக ₹7 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை சந்தை நிலவரம் இருந்து வந்த நிலையில் நேற்று ஆடுகளின் விலை சற்று குறைவாக இருந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அதிகளவில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கசையாடுகள் வரத்து இருந்த நிலையில், சென்ற வார விற்பனையை விட இந்த வாரம் விற்பனை சற்று கூடுதலாத நடைபெற்றதே தவிர ஆடுகள் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறுகையில், ‘இந்த வாரம் ஆடுகள் விலை எதிர்பார்த்த அளவு இல்லை. வரும் வாரங்களில் கிருஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் நெருங்குவதால் இதே நிலைமை நீடிக்காது. அடுத்தடுத்த வாரங்களில் ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்’ என்றனர்.

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு ஆடுகள் விலை உயரும்: எதிர்பார்ப்புடன் இருப்பதாக வியாபாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Christmas ,New Year ,Pongal ,KV Kuppam ,Dinakaran ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!