×

சிறுகளத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணம்: ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்

குன்றத்தூர்: சிறுகளத்தூர் ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் பணத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில், வாழ்வாதாரம் இழந்து தவித்த 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் துயர் துடைக்கும் வகையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை வேளச்சேரியில் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கி தொடங்கி வைத்தார்‌.

அதனைத்தொடர்ந்து, சிறுகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெலடிப்பேட்டை ரேஷன் கடையில் அப்பகுதி பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 1218 குடும்ப அட்டைதாரர்களில் வெள்ள நிவாரண உதவி பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று 1205 குடும்ப அட்டைதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில், நேற்று பிற்பகல் வரை மொத்தம் 466 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் அடிப்படையில், ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதனை அப்பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்த, வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணியில் சிறுகளத்தூர் ஊராட்சி அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சிறுகளத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணம்: ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Sirukalathur Panchayat ,Kunradathur ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு