×

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? இணையதளத்தில் பரவும் தகவலால் பரபரப்பு

துபாய்: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பரவும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். இந்தியாவால் தேடப்பட்டு வரும் இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த மறுத்து வருகிறது. இந்தநிலையில் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் தாவூத் இப்ராகிம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதை முன்னிட்டு அந்த மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தளத்தில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ அதிகாரிகள், தாவூத்தின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதைப்பற்றி விசாரித்த போது தாவூத் இப்ராகிமிற்கு மர்ம நபர்கள் விஷம் கலந்து கொடுத்துவிட்டதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட தாவூத் இப்ராகிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்றும் கூறப்படுகிறது. இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த தகவலை உறுதிப்படுத்த மும்பை போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

* பாகிஸ்தான் முழுவதும் இன்டர்நெட் தடை
தாவூத் கராச்சியில் தங்கியிருப்பதாக அவரது மருமகன் தேசிய புலனாய்வு முகமையிடம் கடந்த ஜனவரி மாதம் கூறினார். தாவூத் பாகிஸ்தானில் தங்கியிருந்ததாக பல முறை கூறினாலும், அது பாகிஸ்தான் அரசால் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் உள்ள தாவூத் உறவினர்கள் அலிஷா பார்க்கர், சஜித் வாக்லே ஆகியோரிடம் என்ஐஏ நடத்திய விசாரணையின் போது, பாகிஸ்தான் பெண்ணை மறுமணம் செய்து கொண்டு தாவூத் அங்கு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் தாவூத் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் முழுவதும் இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டது. டிவிட்டர், கூகுள் மற்றும் யூடியூப் சேவைகள் தடைபட்டன. பெரிய சம்பவத்தை மூடி மறைப்பதற்காக பாகிஸ்தான் அரசு இதுபோன்று செய்வதாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

* பாகிஸ்தான் பிரதமர் டிவிட் உண்மையா?
தாவூத் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கரின் டிவிட் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்களையும் பலர் இணையதளத்தில் வெளியிட்டனர். ஆனால் அந்தச் செய்தி போலியானது. இது பிரதமர் அன்வர் உல்ஹக் கக்கரின் கணக்கு அல்ல என்றும் தாவூத் பற்றி எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினர்.

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ளதாக வெளியான டிவிட்டில்,‘மனிதகுலத்தின் மெசியா, ஒவ்வொரு பாகிஸ்தானிய இதயத்திற்கும் அன்பானவர், எங்கள் அன்புக்குரியவர் தாவூத் இப்ராஹிம் மர்ம நபர் கொடுத்த விஷம் காரணமாக காலமானார். அவர் கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை நிறுத்தினார். அவருக்கு ஜன்னத்தில் உயர்ந்த பதவியை வழங்கட்டும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா மியான்தத்?
தாவூத் இப்ராஹிம் இறந்ததை தொடர்ந்து அவரது நெருங்கிய உறவினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஜாவித் மியான்தத் வீட்டு காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவரது வீட்டைச்சுற்றிலும் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இந்த தகவலை மியான்தத் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,’ நான் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை. என்னை வீட்டுக் காவலில் வைத்தது பற்றிய செய்தி தவறானது. தாவூத் பற்றிய செய்திகளில் நான் எதுவும் கூறமாட்டேன், என்ன பேச வேண்டுமோ அதை பாகிஸ்தான் அரசு சொல்லும்’ என்றார்.

The post பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? இணையதளத்தில் பரவும் தகவலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dawood Ibrahim ,Pakistan ,Dubai ,Mumbai ,
× RELATED அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக...