- பிரதம செயலாளர்
- சிவ்தாஸ் மீனா
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- எழிலகம், சென்னை
சென்னை: தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசர கால செயல்பாட்டு அறையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், குறிப்பாக தென்மாவட்டங்களில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை 20 மணிநேரத்தில் 93 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது. 12 ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் உள்ளனர். மாநில சேவை மைய எண் 1070 என்ற எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுதவிர, மழை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருந்து, உதவி கேட்பவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 61 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. முக்கிய தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3,732 புகார்கள் இதுவரை வந்துள்ளது. 170 வரை புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. மழை பாதித்த மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்பு காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களில் அதிக வெள்ள நீர் செல்வதால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அதேபோன்று நீர்நிலைகளுக்கு செல்வது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு தலைமை செயலாளர் கூறினார்.
The post தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளுக்காக முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் appeared first on Dinakaran.