×

மக்களுடன் முதல்வர் திட்டம்; முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் துவக்க விழா, கோவை ஆவாரம்பாளையம் எஸ்.என்.ஆர்.கலையரங்கில் நேற்று நடந்தது. இத்திட்டத்தை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அரசுத்துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற இப்புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, நேற்று (18ம் தேதி) முதல் ஜனவரி 6 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,745 முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடிவுற்றவுடன், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜன.31வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்தக்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

இத்திட்ட துவக்க விழாவில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்வர் சிறப்பு பணி அலுவலர் மதுசூதன் ரெட்டி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிசெல்வன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு), மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்டம்; முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Government ,SNR Kalaiyarang, Coimbatore Avarampalayam ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்