×

4 மாவட்டங்களில் மின்விநியோகத்தை சீரமைக்க 3 சிறப்புக் குழுக்கள் அமைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

நெல்லை: 4 மாவட்டங்களில் மின்விநியோகத்தை சீரமைக்க 3 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், மேற்கண்ட மாவட்டங்களில், பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இன்று (18.12.2023) காலை 10 மணி நிலவரப்படி, மேற்கண்ட மாவட்டங்களில் அதி கனமழை இருப்பினும், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், பெரும்பான்மையான இடங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக ஒரு சில இடங்களில் ஏதேனும் மின் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, அதற்கான காரணங்களை உடனடியாக கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் சரி செய்து, பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, சீரான மின் விநியோகம் வழங்க சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும், மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக, இம்மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில், அதி கனமழையின் காரணமாக தற்போது வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 79 உயரழுத்த மின் கம்பங்கள், 61 தாழ்வழுத்த மின் கம்பங்கள், 2 மின் மாற்றிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 20 உயரழுத்த மின் கம்பங்கள், 9 தாழ்வழுத்த மின் கம்பங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு உயரழுத்த மின் கம்பம், 4 தாழ்வழுத்த மின் கம்பங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2 தாழ்வழுத்த மின் கம்பங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளது.

மேலும், அதிகப்படியான மழை நீர் சூழ்ந்துள்ள காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் அமைந்துள்ள 230 கி. வோ. ஆட்டோ துணை மின் நிலையம் மற்றும் நாசரேத், ஸ்ரீவைகுண்டம் 33/11 கி. வோ துணை மின் நிலையங்கள், திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையின் அருகில் உள்ள கொக்கிரக்குளம் 33/11 கி. வோ துணை மின் நிலையம், சேரன்மகாதேவி 33/11 கி. வோ. துணை மின் நிலையம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓ.துலுக்கப்பட்டி 110/11 கி. வோ. துணை மின் நிலையம், கரிசல்பட்டி 110/11 கி. வோ. துணை மின் நிலையம் உள்ளிட்ட 7 துணை மின் நிலையங்கள் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேற்படி துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் வழங்கப்படும் 1573 மின் மாற்றிகளுக்கும் தற்காலிகமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மழை முழுவதுமாக நின்று விட்டதால், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக 4 மின்மாற்றிகளின் மின் நிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த 8 மின் மாற்றிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகலுக்குள், மின்சாரம் சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு இந்த 8 மின் மாற்றிகளுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கண்ட மாவட்டங்களின் பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளடங்கிய 5,000 பேர் தற்போது களத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 2,78,557 மின்கம்பங்கள், 10,400 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 19,466 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளது. மேலும், மேற்கண்ட மாவட்டங்களில் கன மழையின் காரணமாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்களின் சேதங்களை மதிப்பீடு செய்து, அவற்றை விரைவாக சரிசெய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தினை சீரமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு, பின்வரும் மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கான சிறப்பு குழு:
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் இயக்குநர்(இயக்கம்) திரு. எம். செல்வசேகர் அவர்கள் தலைமையில், மேற்பார்வைப் பொறியாளர், பாதுகாப்பு மற்றும் கருவி காத்தல், மதுரை, மேற்பார்வைப் பொறியாளர், பொது கட்டுமானம், கோயம்புத்தூர், மேற்பார்வைப் பொறியாளர், இயக்கம் சேலம் மேற்பார்வைப் பொறியாளர், பாதுகாப்பு மற்றும் கருவி காத்தல், சென்னை, மேற்பார்வைப் பொறியாளர், பாதுகாப்பு மற்றும் கருவி காத்தல், திருச்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வைப் பொறியாளர் / சிவகங்கை ஆகிய பொறியாளர்களை உள்ளடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கான சிறப்பு குழு:
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் பொது கட்டுமானம் சேலம் வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான சிறப்பு குழு:
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் பொது கட்டுமானம் மதுரை வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர், , மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மதுரை மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களின் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24X7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைப்பேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 4 மாவட்டங்களில் மின்விநியோகத்தை சீரமைக்க 3 சிறப்புக் குழுக்கள் அமைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Minister Gold South ,India ,Nella ,Minister Gold South Rasu ,Minister Gold South Narasu ,Dinakaran ,
× RELATED வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு...