×

குழந்தைகளுக்கான உரிமைகளும் பாதுகாப்பு சட்டங்களும்!

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14 அன்று விமரிசையாக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைகிறதா? அவர்களுக்கான பாதுகாப்புகள் உறுதி செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. நாளுக்கு நாள் குழந்தைகள் மீதான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது. உண்மையாக குழந்தைகள் தினமென்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடிவிட்டு செல்வதல்ல. ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்களே குழந்தைகள்.

முதலில் இந்த குழந்தைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பது தெரியுமா? குழந்தைகளின் உரிமைகள், பராமரிப்பு மற்றும் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் நாடு முழுவதும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், மேலும் அவர்கள் துஷ்பிரயோகம், சுரண்டல், பாகுபாடு போன்ற எந்த வடிவங்களில் வன்முறையை அனுபவித்தாலும் அது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

குழந்தைகளின் உரிமைகள்…

இந்திய அரசியலமைப்பின் படி,  குழந்தைகளின் உரிமைகள்…

* 6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்விக்கான உரிமை.

* 14 வயது வரை எந்தவொரு அபாயகரமான வேலையிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.

* கடத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலில் தள்ளப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டது.

இந்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய துன்பச் சூழல்களை திறம்பட குறைத்துக் குழந்தைகளுக்கு விசாலமான, வலிமைமிக்க பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கத்துடன் தான் குழந்தைகள் நல திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இளஞ்சிறார் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 சட்டப்பிரிவு 80-ன் படி மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கமும் அதற்கான பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது நடைமுறை செயல்பாட்டில் உள்ள இளம்சிறார் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015-ன்படி இந்தியா முழுமைக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை ஏற்படுத்தி, அதற்கான பணியாளர்களை மாநில அரசு நியமனம் செய்து வருகிறது.

மேலும் இத்திட்டத்தின் நோக்கம்

* குழந்தை திருமணத்தை தடுத்தல்.

* குழந்தை தொழிலாளரை மீட்டெடுத்தல்

* குழந்தை பிச்சையெடுத்தலை தடுத்தல்.

* குழந்தைகள் கடத்தப்படுவதை தடுத்தல்.

* அவர்களின் பள்ளி இடைநிற்றலை தடுத்தல்

* குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் ஆகியவற்றை செய்து வருகிறது.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் இத்திட்டம் பல்வேறு சிறப்பம்சங்களை உடையது. 1992ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்கான மற்றும் அவர்களின் வளர்ச்சி பாதையை மாற்றிமைக்கும் திட்டமாகும். இந்த பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் அதன் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதே அதன் உயரிய நோக்கம்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

* பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான அவர்களது கல்வியை உறுதி செய்தல்.

* பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல்.

* இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல்.

* பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல்.

* பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல்.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என்றால் இருவருக்குமான வைப்புத் தொகை தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு, முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர உதவும்.

பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800 வழங்கப்படுகிறது. 1992ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் விதிகளினால், பல பயனாளிகள் இணைவதில் நிலவும் நடைமுறை சிக்கல்களை களைய திட்டமிட்டு தற்போது கள ஆய்வை தொடங்கியுள்ளதாக சமூகநலத் துறை தெரிவித்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த விதிகளினால் தற்போதைய காலக்கட்டத்தில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கண்டறிய சமூகநலத் துறை அதிகாரிகள் தற்போது கள ஆய்வை தொடங்கியுள்ளனர் என்பது நல்ல விஷயம் தானே..!

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post குழந்தைகளுக்கான உரிமைகளும் பாதுகாப்பு சட்டங்களும்! appeared first on Dinakaran.

Tags : Saffron Girl Children's Day ,Vimrisha ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...