×

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்

தூத்துக்குடி: 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இது குறித்து அவர் முகநூல் பக்கத்தில் கூறியதாவது, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தேவையான அளவிற்கு கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கையிருப்பு வைப்பதற்காக ஈரோடு, அம்மாபாளையம், சேலம், அம்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து 20 மெட்ரிக் டன் பால் பவுடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் எந்த தட்டுப்பாடும் ஏற்படாமல் விநியோகிக்கப்பட அந்தந்த மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்களுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Thoothukudi ,Dairy Minister ,Kumarik ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...