×

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைப்பகுதியில் தொடர் கனமழை; வெள்ளத்தில் சிக்கி தவித்த 22 பக்தர்கள் பத்திரமாக மீட்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த பக்தர்கள் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில். இந்த கோவிலானது வனப்பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு காரணமாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட 5 தினங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தனர்.

இதனிடையே தஞ்சாவூரை சேர்ந்த ஒரு அணியினர் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பு அன்று மலை ஏறி சாமி தரிசனம் செய்து அங்கு சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் கடந்த அமாவாசை மற்றும் பிரதோஷத்திற்கு பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த முரளிகணேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் பக்தர்கள் மார்கழி 1ம் தேதி மட்டும் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் சென்றனர். மழை காரணமாக நேற்று இரவு சுமார் 200 பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை ஒன்றன் பின் ஒருவராக கீழே இறங்க ஆரம்பித்தனர். தொடர்ந்து பெய்த அதிகனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் ஓடையை கடக்க முடியாமல் தவித்தனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டு சுமார் 22 பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை கோவிலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை நின்ற பிறகு பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைப்பகுதியில் தொடர் கனமழை; வெள்ளத்தில் சிக்கி தவித்த 22 பக்தர்கள் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur Chaturagiri hills ,Virudhunagar ,Srivilliputhur Chaturagiri ,Srivilliputhur ,Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...