×

ரூ.5000 கோடி முறைகேடு நியோமேக்சின் ரூ.207 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: நிதி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை, எஸ்.எஸ். காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் கீழ் ஏராளமான துணை நிறுவனங்களும் இயங்கின. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்ட பலர் செயல்பட்டனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் தரப்படும் உள்ளிட்ட போலியான வாக்குறுதிகளை அளித்தது.

இதை நம்பி ஏராளமானோர் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு அதிகமாகவும் பலரும் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கைதானவர்களில் நியோமேக்ஸ் இயக்குநர் கமலக்கண்ணன் உள்ளிட்ட சிலர் ஜாமீன் பெற்றனர்.

இவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும், சிபிஐ விசாரணை கோரிய மனுவும் ஐகோர்ட் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. ஓய்வு நீதிபதி குழு அமைத்தால் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணத் தயாராக இருப்பதாகக் கூறிய நியோமேக்ஸ் நிறுவன தரப்புமனு வும் ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.

இதேபோல் நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிதியை அதன் துணை நிறுவனங்களுக்கு மாற்றம் செய்து, வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பாக 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு உத்தரவாதப்படி நடந்து ெகாள்ளாமல் ஏமாற்றியதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரூ.207 கோடி மதிப்புள்ள அசையா ெசாத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

The post ரூ.5000 கோடி முறைகேடு நியோமேக்சின் ரூ.207 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Neomax ,New Delhi ,Enforcement Department ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு இடைக்கால தடை