×

எண்ணூரில் கச்சா எண்ணெய் மிதக்கும் விவகாரம் உயிர்க்கொல்லி வேலையை செய்த நபர்களுக்கு பெரிய தண்டனை: நேரில் பார்வையிட்டபின் கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: எண்ணூர் பகுதிகளில் உபரி நீர் வெள்ளத்தில் ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவன எண்ணெய் கழிவுகள் முகத்துவாரம் ஆறு மற்றும் கடல் பகுதியில் கலந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று ஆய்வு செய்தார். காட்டுக்குப்பம் பகுதியிலிருந்து முன்னாள் காவல் அதிகாரி மவுரியா, சமூக ஆர்வலர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளுடன் 4 படகுகளில் வடசென்னை அனல் மின் நிலையம், தாழங்குப்பம் பகுதிகளுக்குச் சென்ற கமல்ஹாசன், எண்ணெய் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு மீண்டும் காட்டுக்குப்பம் வந்தடைந்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:- இங்கு மாசு சரி செய்யப்பட்டு தூய்மை அடையும் என 7 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தேன். ஆனால், மேலும் அதிகரித்து இருக்கிறது. இதற்கு காரணம் இயற்கை, நாங்கள் என்ன செய்வது எனக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. பிளாஸ்டிக் விரித்தது போன்று எண்ணெய் படலம் முழுமையாக இருக்கிறது. இந்த கழிவுகள் அனைத்தும் 17ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இன்றுதான் (நேற்று) 17ம் தேதி. இன்னும் 17 நாளானாலும் இது முழுமையாக அகற்றப்படாது. இங்கு வேலை செய்யும் யாரும் தொழில்நுட்ப நபர்களோ, அனுபவம் வாய்ந்தவர்களோ கிடையாது.

எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த போதிய இயந்திரங்கள் இல்லை. பாத்ரூம் பக்கட்டை வைத்து அள்ளச் சொல்கிறார்கள். எண்ணெய் கழிவுகள் தொழிற்சாலையில் இருந்து வந்தது. அப்புறப்படுத்துவதற்கு உரிய தொழில்நுட்ப நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை வரவழைத்து கழிவுகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு பொங்கல் போனஸ் கொடுத்து சரி செய்து விட முடியாது. இந்த மாதிரி உயிர்க்கொல்லி வேலையை செய்யும் நபர்களுக்கு அரசு பெரிய தண்டனையை நிர்ணயிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு, ஒன்றிய அரசு என பேசினால் இங்குள்ள மக்கள் குழம்பிவிடுவார்கள். இவர்களுக்கு தேவையானவை வந்து சேரும் என நாம் உறுதி அளிக்க வேண்டும்.

இந்த விவாகரத்தில் தவறு செய்த ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு வேலையில் ஆலை நிர்வாகத்தின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கக்கூடிய வரிப்பணத்தை சுரண்டக்கூடாது. கேவலமாக இருக்கிறது. சந்திரனுக்கு ராக்கெட் விட முடிகிறது. சந்திராயன் விட முடிகிறது. இன்னும் எனது தோழர்களை மலம் அள்ள வைத்துள்ளீர்கள். எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த இயந்திரம் கிடைக்கவில்லை. கழிவுகளை அப்புறப்படுத்த போதிய இயந்திரங்கள் இருக்கிறது. அவற்றை முழுமையாக கொண்டுவர வேண்டும். இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post எண்ணூரில் கச்சா எண்ணெய் மிதக்கும் விவகாரம் உயிர்க்கொல்லி வேலையை செய்த நபர்களுக்கு பெரிய தண்டனை: நேரில் பார்வையிட்டபின் கமல்ஹாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ennore ,Kamal Haasan ,Chennai ,Ennoor ,Union government ,CBCL ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...