×

ஆன்லைன் கேம் விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் 33 லட்சம், 213 சவரன் நகையுடன் நேபாளம் தப்ப முயன்ற சிறுவன்: போலீசார் மடக்கி பிடித்தனர்

சென்னை: ஆன்லைன் கேம் விளையாட பெற்றோர் அனுமதிக்காததால், வீட்டில் இருந்து 33 லட்சம், 213 சவரன் நகையுடன் நேபாளம் தப்ப முயன்ற சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார் (45). சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவரது 15 வயது மகன் வீட்டில் எந்நேரமும் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளான். இதனால், பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர். இதனால் பெற்றோர் மீது சிறுவன் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு வெளியில் சென்ற சிறுவன், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேலும், வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது. சந்தேகத்தின் பேரில், அதில் சோதனை செய்தபோது, அதில் வைத்திருந்த 23 லட்சம் மற்றும் 213 சவரன் தங்க நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் வெங்கட்குமார் புகார் செய்தார். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் பிராங்ளின் டேனி தலைமையில் 3 தனிப்படை அமைத்து மாயமான சிறுவனை தேடி வந்தனர். மேலும், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிறுவனிடம் இருந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, தாம்பரம் பகுதியில் இருப்பது தெரிந்தது. உடனே அங்கு சென்ற தனிப்படை போலீசார், 24 மணி நேரத்தில் சிறுவனை மடக்கி பிடித்தனர். அவனிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, வீட்டில் இருந்து மாயமான பணம், நகை இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்லைன் கேம் விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியதும், தாம்பரத்தில் உள்ள அடகு கடையில் சிறிதளவு நகைகளை அடகு வைக்க காத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் மீதமுள்ள நகை, பணத்துடன் நேபாளம் செல்ல கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியில் விமான டிக்கெட் புக் செய்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் பெற்றோரை காவல்நிலையம் வரவழைத்து சிறுவனை ஒப்படைத்தனர். மேலும், சிறுவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகையையும் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post ஆன்லைன் கேம் விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் 33 லட்சம், 213 சவரன் நகையுடன் நேபாளம் தப்ப முயன்ற சிறுவன்: போலீசார் மடக்கி பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nepal Tutta ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்